அரியலூர் அனிதாவின் தற்கொலைக்கு  நீதி கேட்டும். , நீட் தேர்விற்கு விலக்கு அளிக்க கோரியும் தமிழகமெங்கிலும் இன்று முதல் கல்லூரி மாணவர்கள் காலவரையற்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்டஅனிதாவின் மரணம் தமிழக மாணவர்களிடையே தற்போது  பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது கடந்த 2 நாட்கள்  விடுமுறை என்பதால் ஆங்காங்கே பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில், தமிழக மாணவர்கள் இன்று  முதல் அனிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டி பெரும் போராட்டம்  நடைபெறவுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவிவருகின்றன.

மாணவர்கள் வாட்ஸ் ஆப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களின் மூலமாக போராட்டம் தொடர்பான பரப்புரைகளை செய்து வருகின்றனர்.

மேலும் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வாட்ஸ்ஆப் குழுக்கள் மூலமாக இணைந்த மாணவர்கள், இன்று  அனிதாவின் மரணத்திற்கு நீதி வழங்க வேண்டியும், நீட் தேர்விற்கு விலக்கு அளிக்க கோரியும் இன்று முதல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடலாமா என்பது குறித்து விவாதித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

போராட்டத்திற்கான அனைத்து முன்நடவடிக்கைகளையும் மாணவர்கள் கையிலெடுத்து விட்டதாகவும், இன்று முதல் நீட்டுக்கான நிரந்த விலக்கு வேண்டி, நீதிக்கான பயணம் தொடரும் என்றும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருவதால் மாணவர்கள் பெரும் போராட்டம் நடத்துவார்கள் என தெரிகிறது.

மேலும் மெரினா கடற்கரை, பொது இடங்கள், மைதானம் என அனைத்தும் காவல்துறையின் கட்டுப்பாட்டுக்கு கீழ் வந்துவிட்டதால், கல்லூரி வளாகத்தையே தங்கள் போராட்ட களமாக மாற்ற மாணவர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.