தி.மு.க., தலைவராக கருணாநிதி இருந்தபோது, ஆற்காடு வீராசாமியும், துரைமுருகனும், அவருடன் நிழல் மாதிரி வலம் வந்தனர். கருணாநிதி மறைவுக்கு பிறகு தலைவராகி இருக்கிற மு.க.ஸ்டாலின் உடன் யார் போவது என பலத்த போட்டியே நடந்தது. ''ஸ்டாலினுக்கு சீனியர் என்பதால், துரைமுருகன், அவருக்கு வழிகாட்டியைப் போல ஆகி விட்டார். அதனால், ஸ்டாலினின் நிழல் அந்தஸ்தைப் பிடிக்க, எ.வ.வேலு, பொன்முடி, டி.ஆர்.பாலு, ஆ.ராஜா, ஜெ.அன்பழகன் என ஒரு, 'குரூப்'பே முட்டி மோதியது. இவர்களில் எ.வ.வேலுவின் கை ஓங்கியது.

 

இந்தநிலையில் தான் பொருளாளர் பதவியை பிடிக்க காய் நகர்த்தி வந்தார் எ.வ.வேலு. அதனை துரைமுருகன் கைப்பற்றிவிட, கொக்குபோல தவமிருந்த எ.வ.வேலு, பொதுச்செயலாளர் பதவிக்கு காய் நகர்த்தினார். அந்த பதவிக்கு பொருளளராக இருந்த துரைமுருகன் நியமிக்கப்பட, பொருளாளர் பதவிக்கு குறி வைத்தார் எ.வ.வேலு.  

பொருளாளர் பதவிக்கு, கட்சிக்குள் பலத்த போட்டி நடப்பதால், அந்தப் பதவி மேல் பல ஆண்டுகளாக குறி வைத்திருந்த முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, காய் நகர்த்தி வந்தார். ஆனாலும், 'அ.தி.மு.க.,வில் இருந்து வந்தவருக்கு பொருளாளர் பதவியா? என ஸ்டாலினிடம் சிலர் கொளுத்தி போட்டு இருக்கிறார்கள். ''இதற்கு இடையில், ஸ்டாலினிடம் பக்குவமாக பேசி, தனக்கு அந்தப் பதவியை, டி.ஆர்.பாலு, 'ரிசர்வ்' செய்து விட்டதாக கூறப்படுகிறது. இதைக் கேள்விப்பட்ட வேலு, விரக்தியில், திருவண்ணாமலையில் இருக்கிற தன் பண்ணை வீட்டில், முடங்கி கிடப்பதாக தகவல்.