அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரை எப்படியும் இந்த முறை வளைத்துப் போட்டுவிட வேண்டும் என்பதில் திமுக தரப்பு உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பீகார் தேர்தலில் பாஜகவை மண்ணை கவ்வ வைத்து நிதிஷ் குமார் – லாலுவை ஒன்றாக சேர்த்து மிகப்பெரிய மேஜிக் செய்தவர் பிரசாந்த் கிஷோர். மோடியிடம் மட்டும் தான் இவர் ஜம்பம் பலிக்கும், மற்ற தலைவர்களை பிரசாந்த் கிஷோரால் மீண்டும் ஸ்ட்ரீம் லைனுக்கு கொண்டு வர முடியாது என்கிற பேச்சுகளுக்கு பதிலடியாக நிதிஷ்குமாரை மீண்டும் பீகார் முதலமைச்சர் ஆக்கியவர் பிரசாந்த் கிஷோர்.

இந்தியாவில் முதல் அரசியல் வியூக வகுப்பாளர் இவர் தான். மோடியிடம் இருந்து தான் இவரது பயணம் தொடங்கியது. குஜராத் முதலமைச்சராக அடுத்தடுத்து மோடி பதவி ஏற்க பெரும் துணை புரிந்தார். அதோடு மட்டும் அல்லாமல் மோடியின் இமேஜை இந்திய அளவில் உயர்த்தி அவரை பிரதமராக்கவும் பிரசாந்த் கிஷோர் வகுத்த வியூகங்கள எதுவுமே சோடை போகவில்லை. பிரதமரான பிறகு பிரசாந்தை தன்னுடன் வைத்துக் கொள்ள தனது ஆலோசகராக நியமிக்க அதுவும் கேபினட் அமைச்சர் அந்தஸ்தில் வைத்துக் கொள்ள மோடி தயாராக இருந்தார்.

ஆனால் அதனை எல்லாம் மறுத்துவிட்டு மீண்டும் அரசியல் வியூக வகுப்பாளராக களம் இறங்கிய பிரசாந்த் கிஷோர் கடைசியாக செய்த சாதனை, ஆந்திராவில் ஜெகன் மோகனை ஆட்சிக் பொறுப்புக் கொண்டு வந்தது. இதனை தொடர்ந்தே மம்தா பானர்ஜியும் பிரசாந்த் கிஷோரை தன் வசமாக்கினார். அவரது வியூகம் தான் இடைத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் மேற்கு வங்கத்தில் 3 தொகுதிகளையும் வெல்லக் காரணம் என்று பேசப்படுகிறது.

இதற்கிடையே பிரசாந்த் கிஷோரை அதிமுகவின் வியூக வகுப்பாளராக்க ஏகப்பட்ட முயற்சிகள் நடைபெற்றன. டெல்லியில் வைத்து எடப்பாடி பழனிசாமி நேரடியாக பிரசாந்த் கிஷோரிடம் பேசியதாக சொல்லப்பட்டது. எடப்பாடி மட்டும் அல்லாமல் ஓபிஎஸ் தரப்பும் கூட பிரசாந்த் கிஷோரை வளைத்துப் போட முயன்று தோற்றுப்போனது. அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் கூட பிரசாந்த் கிஷோரை எப்படியாவது அதிமுகவின் வியூக வகுப்பாளராக்கும் முயற்சியை செய்து வருகின்றனர்.

இதே போல் கமலும் கூட பிரசாந்த் கிஷோரிடம் பேசிப் பார்த்தார். ரஜினியையும் பிரசாந்த் கிஷோரையும் ஒன்று சேர்க்கும் முயற்சிகள் கூட நடைபெற்றது. ஆனால் பிரசாந்த் கிஷோர் தமிழகத்தில் தற்போது வரை யாருக்கும் ஓகே சொல்லவில்லை. இந்த கேப்பை பயன்படுத்தி திமுக பிரசாந்த் கிஷோரிடம் பேசி வருவதாக சொல்கிறார்கள். ஆனால் அங்கிருந்து பாசிட்டிவான பதில் எதுவும் கிடைக்கவில்லை போல.

இதற்கு காரணம் மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ள ஒரு மாஸ் லீடரைத்தான் பிரசாந்த் கிஷோர் எப்போதுமே விரும்புவார். மோடி, நிதிஷ் குமார், லாலு, ஜெகன் தற்போது மம்தா என பிரசாந்த் கிஷோர் பணியாற்றியவர்கள் அனைவருமே மாஸ் லீடர்கள். அந்த வகையில் தமிழகத்தில் அப்படி ஒரு நபர் தற்போது வரை இல்லை என்பதால் தான் இந்த பக்கம் பாராமுகமாக பிரசாந்த் கிஷோர் இருக்கிறார் என்கிறார்கள்.