கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் இன்னும் குறையவில்லை. கேரளாவில் நேற்றுகூட 5,949 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6.64 லட்சமாகவும், பலி எண்ணிக்கை 2,595 ஆகவும் உள்ளது. சிகிச்சையின் 60,029 பேர் உள்ளனர். இந்நிலையில் கேரள மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பினராயின் விஜயன் கண்ணூரில் கூறுகையில், “கேரளாவி கொரோனா தடுப்பூசிக்கு யாரும் கட்டணம் வசூலிக்க மாட்டார்கள். இதுதான் என்னுடைய அரசாங்கத்தின் நிலைப்பாடு.” என்று தெரிவித்தார். பீகார், தமிழ் நாடு, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்கள் ஏற்கனவே தங்கள் மாநிலங்களில் உள்ள அனைத்து மக்களுக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளன. இந்நிலையில் கேரள முதல்வர் தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதற்கிடையே பினராயி விஜயனின் இந்த அறிவிப்புக்கு காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தேர்தல் நெருங்கிவரும் வேளையில் இதுதொடர்பாக இரு கட்சிகளும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளன.