நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை ஒட்டி அவரின் தீவிர ரசிகரான டீக்கடைகாரர் ஒருவர் பொதுமக்களுக்கு இலவசமாக டீ கொடுத்து வருகிறார். நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு நேற்று இரவு 12 மணி முதல் பல ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கோலிவுட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 70வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது போயஸ் தோட்டத்தில் உள்ள வீட்டின் முன்பு அவரை சந்திக்க வேண்டும் என பல ரசிகர்கள் உற்சாகத்தோடு கூடியுள்ளனர். 

மேலும் இரவு 12 மணிக்கு ரஜினி  ரசிகர்கள் அவரது வீட்டு முன் கேக் வெட்டி வழக்கம்போல் அவரது பிறந்த நாளை கொண்டாடியுள்ளனர். அதேபோல் ரஜினிகாந்தின் பெயரில் காலை முதலே பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடந்து வருகிறது, அவர் விரைவில் அரசியல் கட்சியை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளதால் மேலும் அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் கன்னியாகுமரியை சேர்ந்த ரசிகர் ஒருவர் ரஜினி பிறந்த நாளையொட்டி பொது மக்களுக்கு இலவசமாக டீ வழங்கி வருகிறார். 

குமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்தவர் நாகராஜன். டீக்கடை நடத்திவரும் இவர், கடந்த 30 ஆண்டுகளாக நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகராக உள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ரஜினிகாந்தின் பிறந்த நாளின்போதும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து சுவரொட்டிகள் ஒட்டியும்  கேக் வெட்டியும் நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாடி வந்தார். ஆனால், இன்று ரஜினிகாந்தின் 70வது பிறந்த நாளையொட்டி,  அவரது அரசியல் பிரவேசம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டதையும் சேர்த்து கொண்டாடும் வகையில், ரஜினிகாந்தை பிரபலப்படுத்தும் நோக்கில் தனது டீக்கடையில் இன்று ஒரு நாள் இலவசமாக டீ  வழங்கி வருகிறார். இது குறித்து நாகராஜன் அளித்த பேட்டியில், தனது ஏழ்மைக்கு ஏற்றார்போல தனது கடையில் டீ மட்டும் இலவசமாக வழங்குவதாக கூறியனார், தொடர்ந்து அரசியல்  பணி துவங்கிய பிறகு அவரை பிரபலப்படுத்தும் வகையில் பல்வேறு விதமான தன்னால் இயன்ற அளவுக்கு இது போன்ற செயல்களை செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.