Asianet News TamilAsianet News Tamil

இதெல்லாம் கொஞ்சம் கூட நியாயம் இல்லை.. குழப்பத்தை ஏற்படுத்தும்.. எடப்பாடி அரசுக்கு அறிவுறுத்தும் அன்புமணி..!

மாணவர்களுக்கு நடப்பாண்டில் வழங்கப்பட வேண்டிய மடிக்கணினி, மிதிவண்டி ஆகியவற்றை நிறுத்தி வைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மாணவர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். 

Free laptops for students,Bicycle supply should not be stopped...anbumani ramadoss
Author
Tamil Nadu, First Published Oct 28, 2020, 6:28 PM IST

மாணவர்களுக்கு நடப்பாண்டில் வழங்கப்பட வேண்டிய மடிக்கணினி, மிதிவண்டி ஆகியவற்றை நிறுத்தி வைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மாணவர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். 

இது தொடர்பாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் பயிலும் 11 லட்சத்திற்கும் கூடுதலான மாணவர்களுக்கு நடப்பாண்டில் வழங்கப்பட வேண்டிய மடிக்கணினி, மிதிவண்டி ஆகியவற்றை நிறுத்தி வைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மாணவர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. அரசின் இந்த முடிவு எந்த வகையிலும் நியாயமானதல்ல.

Free laptops for students,Bicycle supply should not be stopped...anbumani ramadoss

தமிழ்நாட்டில் 2011-12 ஆம் ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள், கலை & அறிவியல் மற்றும் பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் முதலாமாண்டும், மூன்றாம் ஆண்டும் பயிலும் மாணவர்கள், பொறியியல் கல்லூரிகளில் இரண்டு மற்றும் நான்காம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இப்போது இந்தத் திட்டம் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும், பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு  பயிலும் மாணவர்களுக்கும் இலவச மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், 11-ஆம் ஆண்டு மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Free laptops for students,Bicycle supply should not be stopped...anbumani ramadoss

 இந்த இரு திட்டங்களின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 11 லட்சத்திற்கும் கூடுதலானவர்கள் பயனடைகின்றனர். நடப்பாண்டில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மடிக்கணினிகள் மற்றும் மிதிவண்டிகளை கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாகவும், அதனால் அந்தத் திட்டங்களை நடப்பாண்டில் மட்டும் கைவிட்டு, அதற்கான நிதியை கொரோனா தடுப்புப் பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்திருப்பதாகவும் அரசு அதிகாரிகளை மேற்கோள் காட்டி ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. கொள்முதல் செய்வதில் தாமதத்தைக் காரணம் காட்டி இந்த இரு திட்டங்களையும் ஓராண்டிற்கு மட்டும் நிறுத்தி வைப்பது தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும். 

Free laptops for students,Bicycle supply should not be stopped...anbumani ramadoss

மாணவர்களிடையே தேவையற்ற பதற்றத்தையும், கவலையையும் உண்டாக்கும். அது அவர்களின் கல்வித் திறனை பாதிக்கும். இப்போதுள்ள திட்டப்படி 11-ஆம் வகுப்பில் ஒரு மாணவருக்கு மடிக்கணினியும், மிதிவண்டியும் வழங்கப் பட்டால் அது அந்த மாணவர் பள்ளிக்கல்வியையும், கல்லூரிக் கல்வியையும் படிப்பதற்கு உதவியாக இருக்கும். நடப்பாண்டில் இந்தத் திட்டத்தை செயல்படுத்தாவிட்டால், அடுத்த ஆண்டில், 11, 12 ஆகிய இரு வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி மற்றும் மிதிவண்டிகளை வழங்க வேண்டியிருக்கும். இது நிச்சயமாக குழப்பங்களை ஏற்படுத்தும். இந்தத் திட்டங்கள் தொடங்கப்பட்ட முதல் இரு ஆண்டுகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட வகுப்புகளின் மாணவர்களுக்கு மடிக்கணினிகளும், மிதிவண்டிகளும் வழங்கப் பட்ட போது பல குழப்பங்கள் ஏற்பட்டன என்பதை தமிழக அரசு அதிகாரிகளால் மறுக்க முடியாது.

பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை பயனற்ற இலவசங்களை வழங்குவதில் உடன்பாடு இல்லை. அதேநேரத்தில் கல்வியைப் பொறுத்தவரை சிலேட்டுக் குச்சியில் தொடங்கி மடிக்கணினி வரை அனைத்தும் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை ஆகும். பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கைகள், நிழல் நிதிநிலை அறிக்கைகள் மற்றும் கல்வி தொடர்பான ஆவணங்களில் இது தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும். மடிக்கணினி என்பது பள்ளிக்கல்விக்கு மட்டுமல்ல.... பொது அறிவை வளர்த்துக் கொள்ளவும், உயர்கல்வி சார்ந்த தேடல்களுக்கும் மடிக்கணினி அவசியமாகும். அனைத்து தரப்பு மாணவர்களுக்கு இப்போது ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், அதற்கு தேவையான செல்பேசி போன்றவற்றை வாங்கித் தர ஏழை பெற்றோர்களால் முடியவில்லை. அத்தகைய மாணவர்களுக்கு உடனடியாக மடிக்கணினி வழங்குவது பெரும் உதவியாக  இருக்கும். மாறாக,  11-ஆம் வகுப்பில் வழங்கப்பட வேண்டிய மடிக்கணினியை ஓராண்டு தாமதித்து வழங்கினால் அது மாணவர்களின் பல்முனை வளர்ச்சிகளை நிச்சயமாக பாதிக்கும்.

Free laptops for students,Bicycle supply should not be stopped...anbumani ramadoss

அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தினசரி கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை உச்சபட்ச அளவில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்காக குறைந்து விட்டன. தமிழக அரசின் ஒப்பந்தங்கள், கொள்முதல்கள், பணி நியமனங்கள் அனைத்துமே இயல்பு நிலைக்கு திரும்பி விட்டன. எனவே, கொரோனா பரவலைக் காரணம் காட்டி இலவச மடிக்கணினி,  மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தைக் கைவிடக் கூடாது. நடப்புக் கல்வியாண்டு நிறைவடைய இன்னும்  6 மாதங்களுக்கும் மேல் இருக்கும் நிலையில், கொள்முதல் பணிகளை உடனடியாகத் தொடங்கி பொங்கல் திருநாளுக்குள் மடிக்கணினி, மிதிவண்டி ஆகியவற்றை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios