ஊரடங்கு உத்தரவு முடியும் வரை கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து  அம்மா உணவகங்களிலும்  மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படும் என உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் கூறியதாவது: கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள், கூலி தொழிலாளா்கள் உணவின்றித் தவிக்கக் கூடாது என்பதற்காக 2 வேளை மட்டுமே உணவு வழங்கப்பட்டு வந்த அம்மா உணவகங்களில் மூன்று வேளையும் உணவு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து இட்லி, ரவை, கோதுமை உப்புமா, கிச்சடி, கலவை சாதங்கள் என வித விதமான உணவு வகைகள் சூடாகவும், சுகாதாரமான முறையிலும் மக்களுக்கு குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. ஊரடங்கு காரணமாக உணவகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் அம்மா உணவகத்துக்கு வரும் வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதேநேரம் வழக்கமாக வழங்கப்படும் உணவின் அளவை அதிகரித்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அம்மா உணவங்களில் இன்று முதல் 14-ம் தேதி வரை பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படும். இதற்கான மொத்த செலவையும் அதிமுக ஏற்கும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். இதனையடுத்து, இன்று காலை கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் அ.தி.மு.க. சார்பில் பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டது.