விவசாயிகளுக்கான இலவச மின்சார திட்டத்தை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் விவசாய பணிகளுக்காக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட மத்திய அரசு 2021 முதலாக அனைத்து விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சார திட்டம் ரத்து செய்யப்படும் என அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இது தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அரசியல் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். 

இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில்;- கூடுதல் கடன் தேவைகளுக்கு தேவையற்ற நிபந்தனைகளை இணைப்பது நியாயமற்றது என்றே தோன்றுகிறது. இது மாநில அரசின் அத்தியாவசியத் தேவைகளை பெறுவதில் சிக்கலை உருவாக்கும். எனவே இதுகுறித்து ஒவ்வொரு மாநில அரசுடன் மத்திய அரசு விவாதித்து முடிவெடுக்க வேண்டும். அதேபோன்று நான்கு முக்கிய துறைகளில், மத்திய அரசின் எந்தவொரு நிதியுதவியையும் எதிர்பார்க்காமல் தமிழக அரசு ஏற்கனவே சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக மின் பகிர்மானத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்வதை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கிறது. மேலும், மானியம் வழங்குவதை மாநில அரசிடமே விட்டுவிட வேண்டும். மத்திய அரசின் அறிவிப்புகளில் இந்த திருத்தங்களை மேற்கொள்ள அரசு முன்வர வேண்டும். கடுமையான நிதி பற்றாக்குறை உள்ள இந்த நேரத்தில் அத்தியாவசிய செலவினங்களை பூர்த்தி செய்ய மத்திய அரசு உதவும் என்று நம்புகிறேன் என கூறியுள்ளார்.