முந்தைய மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில், டஸ்ஸால்ட்நிறுவனத்திடம் மொத்தம் 126 ரபேல் ரக விமானங்களை வாங்க தீர்மானித்து- அதில் 18 விமானங்களைப் பறக்கும் நிலையில் பெற்றுக் கொள்வது, ஏனைய 108 விமானங்களை இந்தியாவிலேயே எச்ஏஎல் நிறுவனம் மூலம் தயாரித்துக்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டிருந் தது. ஒரு விமானத்தின் விலை ரூ. 526 கோடி என்றும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

ஆனால், பின்னர் வந்த மோடி அரசோ மொத்தம் 36 விமானங்களை மட்டும் வாங்குவதென்றும், அவற்றையும் பறக்கும் நிலையிலேயே பெற்றுக் கொள்வதென்றும் ஒப்பந்தம் செய்தது. விலையை ரூ. 1670 கோடி என்று உயர்த்தித் தரவும் முன்வந்தது.

அதுவைத்த ஒரே நிபந்தனை, கூட்டு நிறுவனமாக எச்ஏஎல் இருந்த இடத்தில்- அதனை விலக்கிவிட்டு அனில் அம்பானியின் ‘ரிலையன்ஸ் டிபென்ஸ்’ நிறுவனத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான்.

இதில்தான் ரூ. 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.ஆனால், ரிலையன்ஸ் கூட்டு நிறுவனமாக சேர்த்துக் கொள்ளப்பட்டதில் தங்களின் தலையீடு இல்லை என்று தொடர்ந்து பாஜக அரசு கூறி வருகிறது. இந்திய அரசு கூறித்தான், டஸ்ஸால்ட்டுடன் ரிலையன்ஸ் இணைக்கப் பட்டது என்று பிரான்ஸ் நாட்டின் முன்னாள்ஜனாதிபதி பிரான்காய்ஸ் ஹாலண்டே கூறியதையும் ஒரேயடியாக மறுத்து வந்தது.

தற்போது, மீடியாபார்ட் புலனாய்வு செய்தி நிறுவனம், மோடிஅரசின் பொய்யை மீண்டும் அம்பலப் படுத்தியுள்ளது. மேலும் புதிய பரபரப்பையும் இந்தச் செய்தி மூலம் ஏற்படுத்தியுள்ளது.ஆனால்  ‘டஸ்ஸால்ட்’ நிறுவனமோ மீடியாபார்ட் செய்தியையும் மறுத்துள்ளது.

ரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தை சுதந்திரமாகவே தேர்வு செய்தோம்; எந்த கட்டாயமும் கொடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.மீடியாபார்ட் இவ்வாறு பரபரப்பை கிளப்பியிருக்கும் நேரத்தில், மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், திடீரென 3 நாள் பயணமாக பிரான்ஸ் புறப்பட்டுச் சென்றுள்ளார். அங்கு ரபேல் ஒப்பந்தம் குறித்து பிரான்ஸ்பாதுகாப்பு அமைச்சருடன் அவர் விவாதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.