Four questions asked by the governor Rajbhavan answered
அந்த காலத்தில் தங்கள் பள்ளி ஹெட்மாஸ்டரை பார்த்து அலறாத எடப்பாடி அமைச்சரவையினர் இப்போது கண்டால் கதி கலங்குவது தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தைதான்.
தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு ஆய்வுக்கு சென்று துறைவாரியாக பஞ்சாயத்துகளை தூசி தட்டி கவர்னர் வறுத்தெடுப்பதால் வெறுத்துப் போயுள்ளனர் அமைச்சர்கள். கோயமுத்தூர் பல்கலை கழகத்தின் துணை வேந்தராக இருந்த கணபதி கூட லஞ்ச புகாரில் கையும் களவுமாக பிடிபட்டு உள்ளே சென்றதில் கவர்னரின் கவனிப்பும் இருக்கிறது என்கிறார்கள்.

‘ஊழல் நபரை உள்ளே தள்ளிட தயங்காதீர்கள்’ என்று கவர்னர் ஆசி கொடுத்ததை தொடர்ந்தே அந்த ஆபரேஷன் நிகழ்த்தப்பட்டது! என்று சொல்லப்படுகிறது.
இப்படி தமிழக இரு முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் அலறிக் கொண்டிருக்கும் பன்வாரிலாலை நோக்கி சில கேள்விகளை தொடுத்துவிட்டு, கடுப்பிலிருக்கிறார் டேனியல் ஏசுதாஸ்.
கோயமுத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர்தான் இந்த டேனியல். இவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக கவர்னர் அலுவலகத்தை நோக்கி நான்கு கேள்விகள் கேட்டிருக்கிறாராம்...
1. புரோஹித், தமிழக கவர்னராக பதவியேற்றபோது செய்யப்பட்ட செலவுகள் என்ன?
2. கவர்னராக பொறுப்பேற்றது முதல் இப்போது வரை அவர் மேற்கொண்டுள்ள சுற்றுப்பயண விபரம், அதற்கான செலவுகள்?
3. தமிழக அரசின் துறைகளை ஆய்வு செய்ய கவர்னருக்கு அதிகாரம் உள்ளதா? அப்படி இருப்பின், அந்த அதிகாரத்தை வழங்கிய இந்திய அரசியல் சட்டப்பிரிவின் நகல்களை வழங்கவும்.
4. தற்போதைய தமிழக அமைச்சரவை, மெஜாரிட்டியுடன் கூடியதா அல்லது மைனாரிட்டி அரசா?
- எனும் கேள்விகள்தான் அவை.
இதற்கு பப்பரபே! என பதில் வந்திருக்கிறதாம் கவர்னர் அலுவலகத்திலிருந்து. அதாவது, கடைசி இரு கேள்விகளும் ‘தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி ‘தகவல் வரையறைக்குள் அடங்காது’ என்று பதில் வந்துள்ளதாம். சரி! முதல் இரு கேள்விகளுக்கான பதில் என்னாச்சு? என்று கேட்டால் அந்த இரு கேள்விகளுக்கும் பதிலே தரவில்லையாம்.
இதில் ஏகத்துக்கும் டென்ஷானி கிடக்கிறாராம் ஏசுதாஸ், ‘நான் பிரதமர்களின் சுற்றுப்பயண செலவு விவரங்களையே தகவல் அறியும் சட்டத்தின் படி வாங்கினேன்.
இவர்களோ தகவலை மறைப்பதை பார்த்தால், தங்களின் தவறுகளை மறைப்பதாகவே தெரிகிறது. விடுவேனா இவர்களை!” என்று பொங்கியுள்ளார்.
டரியல் பண்ணுங்க டேனியல்!
