கிசுகிசுக்களுக்கு என்று மிகப்பெரிய ரசிகப்பட்டாளம் இந்த உலகில் இருக்கிறது! அதிலும் பெரிய மனிதர்கள் சம்பந்தப்பட்ட மிகப்பெரிய விவகாரங்களைப் பற்றிய  விஷயங்கள் என்றால் ஒக்காந்து, ஒக்காந்து கேட்பதற்கென்றே பெரும் கூட்டம் இந்த பூமியில் இருக்கிறது. சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டு, விசாரணையிலிருக்கும் பெரிய மனிதரின் விசாரணை தொடர்பாக சில கதகதப்பான தகவல்கள் கசிந்து கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் நம் காதில் வந்து விழுந்த தகவல்களின் செம்ம சூடான சில துண்டுகள் மட்டும் இதோ....

* கஸ்டடியில் மாஜி ஒன்றுமே உருப்படியாக பதிலளிக்காத நிலையில், அவருடன் ஒரு காலத்தில் அதே அமைச்சரவையில் கோலோச்சிய பெரிய மனிதர் ஒருவர் சில ரகசிய ஃபைல்களை சி.பி.ஐ.க்கு அனுபினாராம். 

* அவர் மீது இந்த இக்கட்டான நேரத்தில் இவர் பழியெடுக்க காரணம்?...அந்த காலத்தில் இவரது போனை ஒட்டுக் கேட்டது, உளவுப்படை போட்டு இவரது செயல்களை கண்காணித்தது! என்று சில இம்சைகளை செய்தாராம் இப்போது வளையத்தினுள் இருக்கும் அவர். 

* அப்போதே இருவருக்கும் இடையில் பெரும் பிரளயம் வெடித்து, அமைச்சரவைக்குள் சிரிப்பாய் சிரித்ததாம். ஆனாலும் தலைமை என்னவோ எதிராளிக்கு சாதகமாக தீர்ப்பு கூறியதால், பல்லைக் கடித்துக் கொண்டு பழிவாங்கலுக்காக காத்திருந்தவர் இப்போதைய தருணத்தை பயன்படுத்தியிருக்கிறார். 

* கைதாகி இருப்பவர் நிதி துறையின் உச்சப் புள்ளியாக இருந்த போது அம்பானி சகோதரர்களுக்குள் சொத்து பஞ்சாயத்து வந்ததாம். அதை சுமூகமாக பேசி, பிரித்து தீர்ப்பு சொல்லியது இவர்தானாம். அதற்கான கட்டணமாக மிக மிகப்பெரிய தொகை ஒன்று மகனின் நிறுவனத்துக்கு கடல் கடந்த ஒரு நாட்டில் செட்டில் செய்யப்பட்டதாம். அது தொடர்பான ஃபைல்களை  மிக முழுமையாக எடுத்து சி.பி.ஐ.யிடம் கொடுத்திருக்கிறாராம் பழிவாங்கும் பேர்வழி. 

* தூத்துக்குடி மக்கள் வலுவாய் எதிர்க்கும் ஸ்டெர்லைட் ஆலைக்கு அந்நியச் செலாவணி விவகாரங்கள் எழுந்தபோது அதையும் தீர்த்து வைத்து பெரும் பணத்தை பார்த்தார் என்றும் போட்டுக் கொடுத்துள்ளார் ஆதாரத்தோடு. 

* அதேபோல் ஆட்டோமொபைல் துறையில் கோலோச்சும் சில நிறுவனங்களின் பழைய தணிக்கை விஷயத்தில் பெரும் தொகைகள் இடித்ததாம். இதையும் அவர் தன் அதிகாரத்தை வைத்தே சரி செய்து கொடுத்தாராம். இதற்கும் கைமாறாக பெரும் பணம் கை மாறியதாம். இது தொடர்பான ஆவணங்களையும் போட்டு கொடுத்திருக்கிறார் சூட்கேஸ் நிறைய. 

* கிட்டத்தட்ட பனிரெண்டு தனித்தனி விவகாரங்கள் தொடர்பான 250 கோப்புகளை மாஜி அனுப்பிவைத்துள்ளாராம் சி.பி.ஐ.க்கு. அந்த ஃபைல்கள் சொல்லும் தொகையை கால்குலேட் செய்து பார்த்தால் தலை சுத்தாது, உடம்பே சுத்துமாம்! ஆலமரம், சொம்பு நிறைய தண்ணீர், ஜமக்காளம் என எதுவுமே இல்லாமல் தன் அதிகாரத்தை பயன்படுத்தி மாஜி பண்ணிய பஞ்சாயத்துகளுக்கும், தீர்ப்புகளுக்கும் அத்தனை ஆயிரம் கோடிகள் கிடைத்திருக்கின்றனவாம். எல்லாமே சி.பி.ஐ. வசம் செம்ம பக்காவாய் சிக்கிவிட்டன. என்ன செய்யப்போகிறார் வளையத்தில் இருக்கும் மாஜி!?