former prime minister vajpayee admitted in delhi aiims

இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பாஜக மூத்த தலைவரான அடல் பிஹாரி வாஜ்பாய், 1996 முதல் 2004ம் ஆண்டு வரை பிரதமராக இருந்தார். வாஜ்பாயின் ஆட்சிக்காலம் இந்தியாவின் சிறந்த ஆட்சிக்காலமாக அறியப்படுகிறது. வாஜ்பாயின் நிர்வாகத்திறனுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவரது பிறந்தநாளான டிசம்பர் 25ம் தேதி சிறந்த நிர்வாக நாளாக கடைபிடிக்கப்படுகிறது. நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை பெற்றுள்ளார்.

தனது அரசியல் வாழ்க்கையில், 9 முறை மக்களவை உறுப்பினராகவும், 2 முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். 93 வயதான வாஜ்பாய், அரசியலிலிருந்து ஒதுங்கி ஓய்வெடுத்து வருகிறார்.

இந்நிலையில், இன்று உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாஜ்பாய் அனுமதிக்கப்பட்டது தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. எனினும் வழக்கமான பரிசோதனைக்காகவே வாஜ்பாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பரிசோதனை முடிந்ததும் வீடு திரும்புவார் எனவும் எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.