மத்தியில் பாஜக ஆட்சி மீண்டும் அமைய உள்ளது. 7 கட்டங்களாக நடந்த மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடந்துவருகிறது. 

தேர்தல் நடந்த 542 தொகுதிகளில் 340க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 94 மற்றும் மற்ற கட்சிகள் 104 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன. ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை விட அதிகமான தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிப்பதால் மீண்டும் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைவது உறுதியாகிவிட்டது. 

பாஜகவை கடுமையாக எதிர்த்த மம்தா பானர்ஜி முதல்வராக இருக்கும் மேற்கு வங்கத்தில் கடும் சவால் அளித்த பாஜக, உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் - மாயாவதி மெகா கூட்டணியை அடித்து காலி செய்துவிட்டது. அண்மையில் காங்கிரஸிடம் ஆட்சியை இழந்த மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களில், மக்களவை தேர்தலில் மீண்டும் கொடி நாட்டியுள்ளது. 

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களில் மொத்தமாக ஒருசில தொகுதிகளை தவிர மற்ற அனைத்திலும் பாஜக வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. உத்தர பிரதேசத்தில் பாஜகவை வீழ்த்துவதற்காக ஒன்று சேர்ந்த சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி மண்ணை கவ்வியுள்ளது. 80 தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேசத்தில் பாஜக 58 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. அகிலேஷ் - மாயாவதி கூட்டணி வெறும் 21 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. 

கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளில் 24 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது. முன்னாள் பிரதமர் தேவெகௌடா, கர்நாடக முன்னாள் முதல்வர் வீரப்ப மொய்லி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் தோற்பது உறுதியாகிவிட்டது. 

தும்கூர் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் பிரதமர் தேவெகௌடா, பாஜக வேட்பாளர் பசரவராஜை விட பின் தங்கியுள்ளார். தேவெகௌடா தோற்பது உறுதியாகிவிட்டது. அதேபோல சிக்கபல்லாபூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் வீரப்ப மொய்லி, பிஎன் பச்சே கௌடாவிடம் தோல்வியை தழுவ உள்ளார். 

கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி, பாஜக ஆதரவுடன் களம் கண்டுள்ள சுமலதாவி அம்ப்ரீஷிடம் தோல்வியடைய உள்ளார். குல்பர்காவில் காங்கிரஸ் வேட்பாளரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவும் பாஜக வேட்பாளர் உமேஷ் ஜாதவிடம் தோல்வியடைய உள்ளார். 

இவ்வாறு முன்னாள் பிரதமர், முன்னாள் முதல்வர், நடப்பு முதல்வரின் மகன், காங்கிரஸின் சீனியர் தலைவர் என பல நட்சத்திர வேட்பாளர்களும் பாஜகவிடம் மண்ணை கவ்வியுள்ளனர்.