முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. 

நாட்டின் 13வது குடியரசுத் தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜி  தனது இல்லத்தில் உள்ள கழிவறையில் நேற்று முன்தினம் இரவு வழுக்கி விழுந்ததால் தலைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, நேற்று டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூளை ரத்த நாளங்களில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்குவதற்கான அறுவை சிகிச்சைக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று உறுதியானது.

இதைத் தொடர்ந்து கடந்த வாரங்களின் தன்னை சந்தித்த அனைவரும் தனிமைப்படுத்திக் கொண்டு கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என  பிரணாப் முகர்ஜி டுவிட்டர் பதிவில் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, அவரது மூளையில் இருந்து ரத்த கட்டி நீக்கப்பட்டது. ஆபரசேனுக்குப்பின் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் வென்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில், இது தொடர்பாக ராணுவ மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்;- இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி டெல்லி ராணுவ மருத்துவமனையில் நேற்று ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார். உயிர் வாழ்வதற்காக அவருக்கு மூளையில் உள்ள கட்டியை நீக்குவதற்கான ஆபரேசன் நடைபெற்றது. ஆபரேசனுக்குப்பின் தொடர்ந்து அவர் மோசமான நிலையில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு கொரோனா தொற்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.