முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு நேற்று மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவரது உடல்நிலை சற்று கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நாட்டின் 13வது குடியரசுத் தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜி  தனது இல்லத்தில் உள்ள கழிவறையில் நேற்று முன்தினம் இரவு வழுக்கி விழுந்ததால் தலைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, நேற்று டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூளை ரத்த நாளங்களில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்குவதற்கான அறுவை சிகிச்சை நேற்று மேற்கொள்ளப்பட்டது. 

அதில், மூளையிலிருந்த அடைப்பு நீக்கப்பட்டது. அவரது உடல் நிலை ஆபத்தான நிலையில் இருப்பதால், தீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாச கருவி உடன் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதனிடையே ராஷ்டிரபதி பவனின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜியுடன் தொடர்பு கொண்டு, முகர்ஜியின் உடல் நிலை குறித்து விசாரித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னதாக பிரணாப் முகர்ஜி, தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சமீப நாட்களாகத் தன்னை தொடர்பு கொண்டவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.