டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவர் தொடர்ந்து கவலைக்கிடமாக இருக்கிறார்.இவர் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று அவரது கிராமத்தில் குலதெய் வழிபாடு நடைபெற்றிருக்கிறது.

முன்னாள் ஜனாதிபதியும், பாரத ரத்னா விருது பெற்றவருமான பிரணாப் முகர்ஜி. 84 வயதை  கடந்த இவர்  9-ந்தேதி இரவு தனது வீட்டு குளியலறையில் தவறி விழுந்தார்.உடனடியாக அவர் டெல்லியில் உள்ள ராணுவத்தின் ஆர்.ஆர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு எம்.ஆர்.ஐ. மற்றும் சி.டி. ஸ்கேன் எடுக்கப்பட்டது. இதில் பிரணாப்பின் மூளையில் ரத்தம் உறைந்திருந்தது தெரியவந்தது. எனவே இதை அகற்ற டாக்டர்கள் முடிவு செய்தனர்.

 5 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து  மூளையில் இருந்த ரத்தக்கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டது.இந்த அறுவை சிகிச்சைக்குப்பின் பிரணாப்பின் உடல்நிலை கவலைக்கிடமானது. அவருக்கு வென்டிலேட்டர் கருவி உதவியுடன் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.நேற்றும் பிரணாப்பின் உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை. அவர் தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. அவரது உடல்நிலையை பல்துறை வல்லுனர்கள் அடங்கிய டாக்டர் குழு ஒன்று தீவிரமாக கண்காணித்து வருகிறது.

முன்னதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுடன் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு தொற்று ஏற்பட்டு இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையே தனது தந்தை படிப்படியாக தேறி வருவதாக பிரணாப்பின் மகன் அபிஜித் முகர்ஜி தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டார். அறுவை சிகிச்சைக்குப்பின் அடுத்த 96 மணி நேரம் மிகவும் முக்கியமானது என டாக்டர்கள் கூறியிருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், தனது தந்தைக்காக நாட்டு மக்கள் பிரார்த்திக்குமாறும் கேட்டுக்கொண்டு உள்ளார்.

இந்த நிலையில் பிரணாப் முகர்ஜி விரைவில் உடல்நலம் பெற வேண்டி, அவரது சொந்த ஊரான மேற்கு வங்காளத்தின் பிர்பும் மாவட்டத்துக்கு உட்பட்ட கிர்னாகர் கிராமத்தில் உள்ள அவரது மூதாதையர் வீட்டில் நேற்று குலதெய்வத்துக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் பிரணாப்பின் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.