ADMK : அதிமுகவில் புதிய அமைப்பு செயலாளரை நியமித்த எடப்பாடி.! யார் இந்த மகேந்திரன்.?
தென் மாவட்டங்களில் அதிமுகவை பலப்படுத்தும் வகையில், அதிமுகவின் அமைப்பு செயலாளராக முன்னாள் எம்எல்ஏ மகேந்திரனை நியமித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
அதிமுக அதிகார மோதல்
அதிமுக அமைப்பு செயலாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான ஐ.மகேந்திரனை நியமித்து அதிமுக பொதுச்செயலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்தநிலையில், யார் இந்த மகேந்திரன் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஏற்பட்ட அதிகார போட்டி காரணமாக பல பிளவுகளாக அதிமுக பிளவுபட்டது. அப்போது டிடிவி அணி புதிய கட்சி தொடங்கிய நிலையில், முக்கிய நிர்வாகியாக செயல்பட்டவர் தான் இந்த மகேந்திரன்,
உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் ஐ.மகேந்திரன். இவர், அமமுக தலைமைக் கழக செயலாளர், மதுரை புறநகர் மாவட்ட செயலாளராக இருந்தார். 2006-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் உசிலம்பட்டி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக 2019-ம் ஆண்டு திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட்டார்.
அமைப்பு செயலாளர் நியமனம்
அப்போது மகேந்திரன் 31,199(13.80%) வாக்குகளை பெற்றார். இதனால் ஆளுங்கட்சியான அதிமுக தோல்வியை சந்திக்க நேர்ந்தது. இதே போல 2021 சட்டமன்ற தேர்தலிலும் அமமுக சார்பாக போட்டியிட்டு அதிகளவில் வாக்குகளை பெற்றார். இந்தநிலையில் அமமுகவில் முக்கிய தலைவராக இருந்த மகேந்திரனை அதிமுக தலைமை தட்டி தூக்கியது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். ஓ.பன்னீர் செல்வம் அணியில் எம்எல்ஏவாக இருக்கும் அய்யப்பனுக்கு டப் கொடுக்கும் வகையில் அதிமுக காய் நகர்த்தியுள்ளது. மேலும் நாடாளுமன்ற தேர்தலில் முக்குலத்தோர் வாக்குகளை கைப்பற்றவே தற்போது மகேந்திரனுக்கு அதிமுக அமைப்பு செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்