Asianet News TamilAsianet News Tamil

Thangamani: முன்னாள் அமைச்சர் தங்கமணி குடும்பத்திற்கு இவ்வளவு சொத்தா.? புட்டு புட்டு வைத்த லஞ்ச ஒழிப்பு போலீஸ்

நாமக்கல் பிரிவு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்வதற்கும் வழக்கு தொடர்பான விவரங்களை சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை கண்காணிப்பாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

Former Minister Thangamani's family has so much property ..? FIR Report.
Author
Chennai, First Published Dec 15, 2021, 11:12 AM IST

முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி க்கு சொந்தமான 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் வருவாய்துறை அமைச்சராகவும், தொழில்துறை அமைச்சராகவும் பின்னர் மின்சார துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர் தங்கமணி. இவர் தற்போது குமாரபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் தங்கமணி, அவரது மனைவி சாந்தி, மகன் தரணிதரன் ஆகிய 3 பேர் மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு செய்து நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான 69 இடங்களில் அதிரடி சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர் விஜயபாஸ்கர், எஸ்.பி வேலுமணி, சி.விஜயபாஸ்கர், கே.சி வீரமணி ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்ட நிலையில், மற்றுமொரு முன்னாள் அமைச்சரான தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னையில் 14 இடங்களிலும், வேலூர், ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர்,  திருப்பூர் மற்றும் ஆந்திரா கர்நாடகா போன்ற மாநிலங்கள் உட்பட அவருக்குச் சொந்தமாக உள்ள 69 இடங்களில் 200-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இந்த சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 23.5.2016 முதல் 06.05.2021 காலகட்டத்தில் இவர் மின்சாரத்துறை அமைச்சராக இருந்தபோது தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாகவும் அதன்மூலம் தனது பெயரிலும் தனது குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் பெயரிலும் பல்வேறு அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வாங்கி குவித்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து முதல் தகவல் அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

Former Minister Thangamani's family has so much property ..? FIR Report.

குறிப்பாக 2016 ஆம் ஆண்டு தேர்தலின் போது முன்னாள் அமைச்சர் தங்கமணி சார்பில் வேட்புமனுத் தாக்கலின்போது காட்டப்பட்ட சொத்து விவர அறிக்கையில் அபிடோவிட் மதிப்பை கணக்கிட்டுப் பார்க்கும்போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தெரியவந்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அந்த சுற்றறிக்கையில் தனது மகன் தரணிதரன் பெயரில் "முருகன் எர்த் மூவர்ஸ்" என்ற நிறுவனம் இயங்கி வருவதாக கணக்கு காட்டியிருந்த நிலையில், பெயரளவில் மட்டுமே அப்படி ஒரு நிறுவனம் இயங்கி வருவதாக கணக்கு காட்டி பதிவுசெய்து முறைகேடாக வரும் வருமானத்தை மறைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வெளியிட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதேபோல தனது மனைவி சாந்தி பெயரில் எந்தவித தொழிலும் நடைபெறவில்லை என முன்னாள் அமைச்சர் தனது சொத்து விவர அறிக்கையில் தெரிவித்திருந்தாலும் முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் அவரது மகன் பெயரில் உள்ள சொத்துக்களை மறைத்து வைக்க தங்கமணியின் மனைவி சாந்தி உதவி இருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 2016 ஆம் ஆண்டு வேட்புமனு தாக்கல் செய்யும்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் பெயரில் உள்ள சொத்து மதிப்பு 1 கோடியே 1 லட்சத்தி 86 ஆயிரத்து 17 ரூபாய் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த சட்டமன்ற தேர்தலில் 2021 ஆம் ஆண்டு வேட்புமனுத் தாக்கலில் இணைத்து காட்டப்பட்ட சொத்துக்களின் மதிப்பு 8 கோடியே 47 லட்சத்து 66 ஆயிரத்து 318 ரூபாயாக இருந்துள்ளது. இந்நிலையில் 2016 முதல் 2021ஆம் ஆண்டு வரை முன்னாள் அமைச்சர் தங்கமணி மனைவி சாந்தி மற்றும் மகன் தரணிதரன் ஆகியோர் சம்பாதிப்பதாக கூறப்படும் வருமானம் 5 கோடியே 24 லட்சத்து 86 ஆயிரத்து 617 ரூபாய் ஆகும். அதேபோல 2016 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை செலவு உள்ளிட்டவற்றை கணக்கிட்டு பார்க்கும் பொழுது 2 கோடியே 64 லட்சத்து 28 ஆயிரத்து 335 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் 2016 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை முன்னாள் அமைச்சர் தங்கமணி, அவரது மனைவி சாந்தி மற்றும் மகன் தரணிதரன் வைத்துள்ள உண்மையான சொத்து மதிப்புகளை கணக்கிட்டுப் பார்க்கும்போது 7 கோடியே 45 லட்சத்து 80 ஆயிரத்து 301 ரூபாய் சொத்துக்களை அதிகமாக வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் இவர்கள் செலவு செய்ததாக சுமார் 2 கோடியே 60 லட்சத்து 8 ஆயிரத்து 282 ரூபாய் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட சொத்து மதிப்பு மற்றும் செலவு கணக்குகளை கணக்கிட்டு பார்க்கும் பொழுது சுமார் 4 கோடியே 85 லட்சத்து 72 ஆயிரத்து 19 ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை குவித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Former Minister Thangamani's family has so much property ..? FIR Report.

தொடர்ந்து விசாரணை செய்ததில் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் மருமகன் தினேஷ்குமார் Mantro நெட்வொர்க் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் தனியார் சேனலின் இயக்குனராக இருந்து வருவது தெரியவந்துள்ளது. மேலும், மெட்ராஸ்  ரோட் லைன் ஜெயஸ்ரீ செராமிக், ஸ்ரீ பிளை அண்ட் வணீர், ஏ.ஜி.எஸ் டிரான்ஸ் மூவர், ஸ்மார்ட் ட்ரேட் லிங்ஸ், ஸ்மார்ட் டெக் மற்றும் ஸ்ரீ பிளைவுட், இன்ப்ரா ப்ளூ மெட்டல் ஆகிய நிறுவனங்களிலும் பங்குதாரராக இருந்து வருவது தெரியவந்துள்ளது. தினேஷ் குமாரின் தந்தை சிவசுப்பிரமணியன் இப்பெயரில் எம்.ஆர்.எல் லாஜிஸ்டிக்ஸ் என்ற பெயரில் நூற்றுக்கணக்கான லாரிகள் இயங்கி வருகின்றன.முன்னாள் அமைச்சர் தங்கமணியின் மகளான லதா ஸ்ரீ பெயரில் ஜெயஸ்ரீ பிளைவுட் மற்றும் ஜெயஸ்ரீ பில்ட் புரோ என்ற பெயரில் நிறுவனங்கள் நாமக்கல் பள்ளிபாளையத்தில் செயல்பட்டு வருவதுடன் இதுபோன்று கணக்கில் வராமல் கோடிக் கணக்கிலான சொத்துக்களை முன்னாள் அமைச்சர் தங்கமணி தனது பெயரிலும் தனது உறவினர்கள் பெயரிலும் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வாங்கிக் குவித்து இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமல்லாது சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தை கிரிப்டோ கரன்சிகளாக மாற்றி முதலீடு செய்து சொத்துக்களை குவித்து இருப்பதாகவும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் ஊழல் தடுப்பு  சட்டத்தின் கீழ் முன்னாள் அமைச்சர் தங்கமணி அவரது மனைவி சாந்தி மற்றும் மகன் தரணிதரன் மீது நாமக்கல் பிரிவு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்வதற்கும் வழக்கு தொடர்பான விவரங்களை சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை கண்காணிப்பாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது. சோதனையின் முடிவில் முன்னாள் அமைச்சர் மற்றும் உறவினர்கள் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் நகை மற்றும் சொத்து ஆவணங்கள் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios