கன்னியாகுமரி என்றாலே அரசியல் தலைவர்களுக்கு அலர்ச்சி தான். சென்டிமென்டாக பல்வேறு சம்பவங்கள் சொல்லப்படுகிறது.இதுஒருபுறம் இருந்தாலும் முதல்வரின் நெருங்கிய நண்பராக அவரின் தீவிர ஆதரவாளராக வலம் வரக்கூடிய முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் தன்னிச்சையாக எம்எல்ஏ வேட்பாளர் பட்டியலை அறிவித்திருப்பது அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.

அதிமுக தொண்டர்களின் வேட்பாளர் கனவை தகர்க்கும் வகையில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பெயரை   தளவாய்சுந்தரம் தன்னிச்சையாக அறிவித்திருப்பது சர்வாதிகார செயல். இதனை தலைமை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என கன்னியாகுமரியில் திரைப்பட இயக்குனரும் அதிமுக தலைமைகழக நட்சத்திர பேச்சாளருமான அன்பழகன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசியவர்..


'கன்னியாகுமரி மாவட்டம். தக்கலையில் நடந்த அதிமுக கட்சியின் 49 வது ஆண்டு விழாவில் தளவாய்சுந்தரம் பேசும் போது வருகிற சட்டமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் தளவாய்சுந்தரம், நாகர்கோவில் தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ ராஜன், பத்மநாபபுரம் தொகுதியில் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஜாண்தங்கம் ஆகியோர் போட்டியிடுவார்கள் என கூறியதாக அதிமுக தொண்டர்கள் என்னிடம் கூறினர். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு வேட்பாளர் பெயரை அறிவிக்கவேண்டும் என்றால் முதல்வரோ, துணைமுதல்வரோ அல்லது கட்சியின் 11 பேர் கொண்ட  ஒருங்கிணைப்பு குழுவோ தான் அறிவிக்கவேண்டும்.வேட்பாளர் அறிவிப்பு என்பது கற்பு நிலை, அது தேர்தல்  நேரத்தில் தான் முடிவு செய்யப்படும். தேர்தலில் போட்டியிட அதிமுக தொண்டர்கள் அனைவருக்கும் உரிமை உண்டு. அது எல்லோருடைய கனவும் கூட அந்த கனவை தகர்க்கும் நோக்கில் குமரி மாவட்டத்தில்  வேட்பாளர் அறிவிப்பு என்ற தன்னிச்சையான முடிவு கட்சி கட்டுபாட்டை மீறும் சர்வாதிகார போக்கு. தற்போது சமூக வலைதளங்களில் இதுபோன்று பரவும் செய்திகளால் தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர்.