தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்கவுள்ள நிலையில், இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார்.
டெல்லி செல்லும் முதலமைச்சர்
டெல்லியில் தீன் தயால் உபாத்யாயா மார்க் பகுதியில் 8 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 3 மாடி கட்டிடங்களை கொண்ட டெல்லி அண்ணா அறிவாலயம் கட்டப்பட்டுள்ளது. இந்த பணிகளை ஏற்கனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு முறை பார்வையிட்டுள்ளார். இதனையடுத்து வருகிற 2 ஆம் தேதி அண்ணா கலைஞர் அரங்கம் திறக்கப்படவுள்ளது. இந்த அரங்கத்தில் அண்ணா, கருணாநிதி பெயரில் நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஏராளமான நூல்களை வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த திறப்பு விழாவில் பங்கேற்க்குமாறு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு விழா அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று இரவு டெல்லி செல்லும் முதலமைச்சர் நாளை பிரதமர் மற்றும் முக்கிய மத்திய அமைச்சர்களை சந்திக்கவுள்ளார். அப்போது தமிழகத்தில் தேவையான திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு, நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி தொகை போன்றவற்றை வழங்குமாறு வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோடியை காயப்படுத்திய ஸ்டாலின்?
முதலமைச்சர் டெல்லி பயணம் தொடர்பாக கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சரும், மதுரை சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் ராஜூ, முதலமைச்சர்கள் தங்கள் மாநில கோரிக்கைகள் தொடர்பாக பிரதமரை சந்திப்பது வழக்கமான ஒன்றுதான் என கூறினார். அதிமுகவில் முதலமைச்சர்களாக இருந்த அனைவரும் பிரதமரை சந்தித்து சாணக்கிய தனமாக திட்டங்களை நிறைவேற்றியுள்ளதாக தெரிவித்தார். ஜல்லிக்கட்டு அனுமதியாக இருந்தாலும், 7.5% இட ஒதுக்கீடாக இருந்தாலும் பல்வேறு திட்டங்களை தமிழகத்திற்காக நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறினார். அந்த அளவிற்கு மத்திய அரசோடு இனக்கமாக இருந்ததாக தெரிவித்தார்.

ஒன்றிய அரசு என அழைத்த திமுக
ஆனால் திமுக அரசு பதவியேற்றதில் இருந்து மத்திய அரசு மற்றும் மத்திய அமைச்சர்களை சிறுமைப்படுத்தும் வகையில் ஒன்றிய அரசு, ஒன்றிய அமைச்சர்கள் என அழைத்து வருவதாக தெரிவித்தார். இதனை கண்டிப்பாக பிரதமர் மனதில் வைத்திருப்பார் என கூறினார். தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலமும் இது போன்று அழைக்காத நிலையில் தமிழகம் மட்டும் ஒன்றியம் என்ற வார்த்தையை பயன்படுத்துவதாக தெரிவித்தார். இந்த பிரச்சனை நிச்சயம் பிரதமர் மனதை காயப்படுத்தி இருக்கும் என குறிப்பிட்டார். எனவே இந்த பிரச்சனை ஒருபக்கம் உள்ள நிலையில் தமிழக முதலமைச்சர் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து தமிழகத்திற்கு தேவையான புதிய திட்டங்களை கேட்கவுள்ளதாக தெரிவித்தார். எனவே முதலமைச்சரின் பயணம் வெற்றி பெற வேண்டும் என அப்போது செல்லூர் ராஜூ கூறினார்.
