திமுக ஆட்சி கலையும்.. 30 ஆயிரம் கோடி விவகாரத்தை சொல்லி திமுகவை பயமுறுத்தும் அதிமுக மாஜி அமைச்சர் காமராஜ்
அதிமுகவுக்கு வீழ்ச்சி என்பதே கிடையாது. மீண்டும் ஆட்சியில் அமரும் நேரம் நெருங்கிவிட்டது என்று அதிமுக மாஜி அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.
வருகிற 29ம் தேதி திமுக அரசை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டம் குறித்து அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது. இதற்கு அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர். காமராஜ் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏவுமான ஆர். காமராஜ், அதிமுக பொதுச் செயலாளராக ஆன பிறகு முதன்முறையாக தஞ்சைக்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு செங்கிப்பட்டி முதல் வடக்கூர் வரை எழுச்சியான வரவேற்பு அளித்த நிர்வாகிகள், தொண்டர்களுக்கு நன்றி. தஞ்சை தெற்கு மாவட்ட அதிமுக இப்போது தான் கூடுதல் எழுச்சியோடு இருக்கிறது என்பதை பார்க்க முடிகிறது.
அதிமுக ஒரு மக்கள் இயக்கம். அதிமுகவுக்கு வீழ்ச்சி என்பதே கிடையாது. திமுக ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் தான் நிறைவடைந்து இருக்கிறது. அதற்குள் மக்களிடம் நிறைய கெட்ட பெயரை திமுக பெற்றுள்ளது. இந்த ஆட்சி எப்போது போகும் என மக்கள் எண்ணி கொண்டு இருக்கிறார்கள். கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சத்தை கொடுத்து அதை மறைக்க பார்த்தார்கள்.
ஆனால் அது விமர்சனமாகிவிட்டது. தஞ்சை கீழஅலங்கத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான பாரில் மது குடித்து 2 பேர் இறந்துவிட்டனர். இவர்கள் குடித்த மதுவில் சயனைடு கலந்து இருக்கிறது என கூறுவது இந்த பிரச்சினையை திசை திருப்பும் முயற்சியாகும். திமுக ஆட்சிக்கு வந்தாலே சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படும். இதனால் தான் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஊர்வலமாக சென்று கவர்னரிடம் மனு அளித்துள்ளோம்.
2 ஜி வழக்கு எப்படி ஆட்சி மாற்றத்திற்கு காரணமாக இருந்ததோ? மேலும் ரூ. 30 ஆயிரம் கோடி பிரச்சினை திமுக ஆட்சி மாற்றத்திற்கு காரணமாக உள்ளது. அதிமுக மீண்டும் ஆட்சியில் அமர்வதற்கான நேரம் நெருங்கிவிட்டது. கூடுதல் பலம் அதிமுகவில் இணைய பலர் தயாராக உள்ளனர். அவர்கள் இணையும் போது கூடுதல் பலம் கிடைக்கும்” என்று பேசினார்.
இதையும் படிங்க..சென்னை - இலங்கைக்கு சூப்பரான கப்பல் பயணம்.. ஒரு டிக்கெட் எவ்வளவு தெரியுமா?