Former minister involved Namakkal Subramaniam suicide case
அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெருக்கமான நாமக்கல் சுப்பிரமணியம் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன.
விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்திய வருமான வரித்துறையினர், அவருக்கு நெருக்கமானவர் என்று கருதப்பட்ட நாமக்கல் சுப்ரமணியத்தின் வீட்டிலும் சோதனை நடத்தினர்.
சோதனையில், அவரது வீட்டில் எதுவும் சிக்கவில்லை என்றாலும், விசாரணைக்கு அழைக்கப்பட்டார். விசாரணையில் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், தற்கொலை செய்து கொல்வதற்கு முன்பாக, சுப்பிரமணியம் அவரது உறவினர்களுக்கு எழுதிய கடிதத்தில், மற்றொரு காண்டிராக்டர் தென்னரசும், விசாரணை அதிகாரி கார்த்திக் மாணிக்கமுமே காரணம் என்று குறிப்பிட்டிருந்தார்.
அதையடுத்து, நாமக்கல் சுப்ரமணியத்திடம் கடைசியாக பேசியவர்கள் யார், யாரென்று ஆய்வு செய்தால், மேலும் உண்மைகள் தெரிய வரும் என்று கூறப்பட்டது.
அதன் பின்னர், அவருடைய செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்த போலீசார், ஒரு முக்கிய நிறுவனத்தை சேர்ந்தவருடனும், முன்னாள் அமைச்சர் ஒருவருடனும் அவர் பேசி இருந்ததை கண்டு பிடித்தனர்.
அதை தொடர்ந்து, அந்த இருவரிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதனால், அந்த முன்னாள் அமைச்சருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தற்போது எடப்பாடி அணியில் இருக்கும் அந்த முன்னாள் அமைச்சர், விரைவில் அணிமாற திட்டமிட்டிருப்பதால், எடப்பாடி தரப்பில் இருந்து விசாரணையில் எந்த குறுக்கீடும் இருக்காது என்று தெரிகிறது.
எனவே, நாமக்கல் சுப்பிரமணியம் தற்கொலை வழக்கில், அந்த முன்னாள் அமைச்சர் யார்? என்று விரைவில் தெரியவரும் என்றுசொல்லப்படுகிறது.
