எப்போவோ இறந்து விட்ட, முதல்வர் பதவியை பயன்படுத்தி கால் காசு சேர்க்காத காமராஜருக்கு மணி மண்டபம் கட்டுகிறேன் பேர்வழியென்று கடந்த பல வருடங்களாகவே நடிகர் சரத்குமாரும் (காங்கிரஸுக்கு சம்பந்தமே இல்லாத இவர் காமராஜரின் பெயரை சொல்லிக்கொண்டு வலம் வர என்ன காரணம்? என்று எல்லோருக்கும் தெரியும்!), காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் சிலரும் அரசியல் செய்து கொண்டிருப்பது தமிழகம் அறிந்த சேதிதான். 

ஆனால் ரெண்டு வருடங்களுக்கு முன்னால் இறந்த ஜெயலலிதாவுக்கு அரசு செலவில் நினைவிடத்தை அமைக்க அ.தி.மு.க. அரசு முடிவெடுத்துள்ளது. அதுவும் சொத்துக் குவிப்பு வழக்கில் மேல்முறையீட்டு தண்டனையை எதிர்நோக்கி இருந்த நேரத்தில் மரணமடைந்துள்ளார். 

இந்நிலையில், ‘ஜெயலலிதாவுக்கு அரசு செலவில் நினைவு இல்லம் கட்ட தடை இல்லை!’, ‘ஜெயலலிதா மீதான ஊழல் வழக்கில், அவர் சட்டப்படி குற்றவாளியல்ல என்று கருதுகிறோம்.’ சமீபத்தில் அ.தி.மு.க. தொண்டர்களை ஏக குஷிப்படுத்திய தீர்ப்புகள் இவை. உச்சநீதிமன்ற பெஞ்சினால் தண்டனை தீர்ப்புக்கு உள்ளாக்கப்பட்டவரை பற்றி இப்படி வெளியாகி இருக்கும் தீர்ப்பு தேசம் முழுவதுமே அரசியல் அரங்கில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

நீதித்துறையின் ஆளுமைகளே இதை அதிர்ச்சி கலந்த வியப்போடு பார்க்கிறார்கள். இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான கே.சந்துரு இந்த விவகாரம் பற்றி தெரிவித்திருக்கும் வெளிப்படையான கருத்தின் சில ஹைலைட் பாயிண்டுகளை கவனிப்போம்...

* அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் சிகிச்சை செலவு தொகையான ஐந்து கோடி ரூபாயை அ.தி.மு.க. தனது கட்சிப் பணத்திலிருந்து கொடுக்க முன்வந்துள்ளது. அதுபோல் கட்சியின் சார்பில் நினைவு இல்லம் அமைத்தால் அதை யாருக் கேள்வி கேட்கப் போவதில்லை.  

* ஆனால், ‘கிரிமினல் சதியில் அங்கம் வகித்தார். அதற்கு தன் இருப்பிடத்தை (போயஸ் வீடு) பயன்படுத்தினார்.’ என்று தெளிவாக உச்சநீதிமன்றம் கூறியிருந்த போதும், உயர் நீதிமன்றம் கிரிமினல்  நடைமுறை சட்டப்படி ‘ஜெயலலிதா குற்றவாளி அல்ல’ என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்திருப்பது முறையல்ல. 

* மக்கள் வரிப்பணத்தில் நினைவு இல்லம் அமைப்பதற்கு தகுதி வேண்டும், அதற்கு தார்மீக உரிமை வேண்டும். 

* உச்சநீதிமன்ற தீர்ப்பில் தொண்ணூற்று ஒன்பது சதவிகிதப் பகுதி அவர் குற்றவாளி என்று கூறியிருக்கிறது. அவர் முறைகேடாக சேர்த்த சொத்துக்களை பட்டியலிடவும் செய்துள்ளது. 

* நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே!