கர்நாடகாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் உள்பட பல பணிகளில் பணியாற்றி நன்மதிப்பை பெற்றவர் சசிகாந்த் செந்தில். கடந்த ஆண்டு ஆட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்த சசிகாந்த் செந்தில், பாஜக அரசுக்கு எதிராக விமர்சனக் கனைகளைத் தொடுத்துவந்தார். குறிப்பாக மத்திய அரசு கொண்டுவந்த என்.ஆர்.சி, சி.ஏ.ஏ, என்.பி.ஆர் ஆகிய சட்டங்களைத் தீவிரமாக விமர்சித்துவந்தார். இந்நிலையில் சசிகாந்த் செந்தில், காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.


இதுதொடர்பாக  தன்னுடைய ட்விட்டர் பதிவில் சசிகாந்த் செந்தில் பதிவிட்டுள்ளார். அதில், “எனது இலக்கினை அடைய காங்கிரஸ் கட்சியோடு இணைந்து பயணிப்பது என்று முடிவெடுத்துள்ளேன். அரசியல் அமைப்பு சட்டத்திலுள்ள விழுமியங்களோடு நெருக்கமான ஓர் இயக்கமாக காங்கிரஸ் இயக்கத்தைப் பார்க்கிறேன். காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தலைமை இன்று இந்தியா கருத்தியல் போரை முன்னெடுக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்துள்ளது. 

காங்கிரஸ் கட்சி வேற்றுமையை வலியுறுத்தவில்லை. ஒருங்கிணைந்து செயல்படுவதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. வெறுப்பை நம்பவில்லை. அன்பையும் நேசத்தையும் நம்புகிறது. இந்தியாவும், உலகமும் 21-ம் நூற்றாண்டில் எதிர்கொள்ளும் சவால்களை காங்கிரஸ் உணர்ந்துள்ளது. மக்களோடு இணைந்து அந்தச் சவால்களை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளது. வரும் நாட்களில் நாட்டின் பல பகுதிகளுக்கு பயணித்து காங்கிரஸ் கட்சியை வளர்ப்பதற்கும் அரசியல் அமைப்புச் சட்டம் சொல்லும் செய்தியை மக்களிடையே எடுத்துச் செல்லவும், இந்தியாவின் விளிம்புநிலை மக்களின் வாழ்வை மேம்படுத்தவும் என் உழைப்பை செலவிட முடிவு செய்துள்ளேன்.” என்று சசிகாந்த் செந்தில் தெரிவித்துள்ளார்.