அந்த செய்தி இன்று அதிகாலை நேரத்தில் இடிபோல என்னைத் தாக்கியது.. வேதனையில் துடிக்கும் மு.க.ஸ்டாலின்..!
எப்போதும் கருப்புத் துண்டு அணிந்து கம்பீரமாக உலவிய மா.மீ., 'பெரியார் விருது' பெற்ற சில நாட்களிலேயே மறைவார் என நான் நினைத்தே பார்க்கவில்லை என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
எப்போதும் கருப்புத் துண்டு அணிந்து கம்பீரமாக உலவிய மா.மீ., 'பெரியார் விருது' பெற்ற சில நாட்களிலேயே மறைவார் என நான் நினைத்தே பார்க்கவில்லை என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில்;- "கீழத்தஞ்சை திமுகவின் மூத்த முன்னோடியும், வேதாரண்யம் தொகுதியின் சட்டப்பேரவை திமுக முன்னாள் உறுப்பினரும், கொண்ட கொள்கையில் உறுதிமிக்கவருமான, 'மா.மீ' என அன்புடன் அழைக்கப்படும் மா.மீனாட்சிசுந்தரம், கொரோனா நோய்த் தொற்றுக்கு ஆளாகி இயற்கை எய்திய கொடுஞ்செய்தி, இன்று அதிகாலை நேரத்தில் இடிபோல என்னைத் தாக்கியது.
திமுகவின் முப்பெரும் விழாவில் மா.மீனாட்சிசுந்தரத்திற்கு 'பெரியார் விருது' வழங்கி ஒருவாரம் கூட நிறைவுறாத நிலையில், இயற்கையின் இந்தச் சதியை ஏற்க மனம் மறுக்கிறது. தனது 17-வது வயதில் திமுகவில் தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்ட மா.மீ., பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் அடியொற்றி, இறுதிவரை சுயமரியாதைக் கொள்கைக்காரராகவே வாழ்ந்து மறைந்துள்ளார். 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம் முதல், திமுக நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் முன்னணித் தளகர்த்தராகக் கலந்து கொண்டவர், மா.மீ.
மிசாவில் ஓராண்டு காலம் சிறையில் இருந்த அஞ்சாத வீரர் அவர். வேதாரண்யம் சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து மூன்று முறை தமிழ்நாடு சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் அளவுக்கு, மக்கள் செல்வாக்குப் பெற்றவராகத் திகழ்ந்து, மக்கள் சேவை ஆற்றினார். திமுகவில் கிளைக் கழகச் செயலாளர் பொறுப்பு தொடங்கி, பல்வேறு பொறுப்புகளை அவர் வகித்துள்ளார். நிறைவாக, நாகை தெற்கு மாவட்ட திமுக அவைத் தலைவராகச் செயல்பட்டு வந்தார்.
இத்தகைய சிறப்புக்குரிய மா.மீனாட்சிசுந்தரத்திற்கு, இந்த ஆண்டுக்கான 'பெரியார் விருது' அறிவிக்கப்பட்டு இருந்தது. கடந்த 15-ம் தேதி அன்று சென்னையில் நடந்த திமுக முப்பெரும் விழா வில் கலந்து கொண்டு, அவர் அவ்விருதினை நேரடியாகப் பெற்றிருக்க வேண்டும். உடல் நலமில்லாத காரணத்தால், அவர் வர இயலவில்லை. முப்பெரும் விழாவில் நான் பேசும்போது, மா.மீனாட்சிசுந்தரத்தின் அனைத்துச் சிறப்புகளையும் சுட்டிக் காட்டிப் பேசினேன். உடல்நலக்குறைவில் இருந்து விரைவில் மீண்டெழுவார் என்று நினைத்தேன்.
எப்போதும் கருப்புத் துண்டு அணிந்து கம்பீரமாக உலவிய மா.மீ., 'பெரியார் விருது' பெற்ற சில நாட்களிலேயே மறைவார் என நான் நினைத்தே பார்க்கவில்லை. திமுகவினரிடமும் பொதுமக்களிடமும் மிகுந்த நன்மதிப்புப் பெற்றிருந்த மா.மீ. மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் மறைவால் ஆற்றொணாத் துயருறும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், திமுக தொண்டர்கள் அனைவருக்கும், எனது ஆறுதலை உரித்தாக்குகிறேன். உடலால் மறைந்தாலும், அவர் ஊட்டிய கொள்கை உரம்; எந்நாளும் திமுக செழிக்கப் பயன்படும் என்பது திண்ணம்!"என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.