இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ அய்யலுசாமி காலமானார்.இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல்கட்சியினர் இரங்கல் தெரிவித்தும் நேரிலும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான அய்யலுசாமி உடல்நலக்குறைவால் காலமானார்.அவருக்கு வயது 92. 1996 முதல் 2001 வரை இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் எம்எல்ஏவாக இருந்தவர் அய்யலுசாமி. இந்திய கம்யூனிஸ்ட் மாநில குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார் . நில அடமான வங்கியின் கூட்டுறவு தலைவர் , பெருமாள்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் , தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில தலைவர் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் என பொறுப்புகளில் திறம்பட பணியாற்றியவர்.

இந்நிலையில் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சொந்த ஊரான பெருமாள் பட்டியில் உள்ள வீட்டில் அதிகாலையில் அவர் காலமானார்.. அய்யலுசாமியின் இறுதிசடங்கு மாலை 5 மணி அளவில் அவரது சொந்த ஊரான பெருமாள்பட்டி கிராமத்தில் நடைபெறுகிறது. அய்யலுசாமி மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.