அதிமுகவின் இரு அணிகள் இணையவுள்ள நிலையில், சற்று நேரத்தில் பன்னீர்செல்வம் ராயபேட்டையில் உள்ள தலைமை அலுவலகம் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக இரண்டாக பிளவுற்றது. சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றார். இதையடுத்து அவர் அணியில் இருந்த எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். 

ஆனால் அவருக்கு எதிராக சசிகலாவால் நியமிக்கப்பட்ட டிடிவி செயல்பட்டதால் இருவருக்கும் இடையே விரிசல் உண்டானது. இதனால் ஆட்சியை தக்கவைத்து கொள்ள எடப்பாடி பழனிசாமி பிரிந்து சென்ற ஒபிஎஸ்சிடம் ஆதரவு கோரினார். 

அதற்கு ஏதுவாக ஒபிஎஸ் வைத்த இரண்டு கோரிக்கைகளையும் நிறைவேற்றினார். இதைதொடர்ந்து நீண்ட நாட்களாக இழுக்கடிக்கப்பட்டு வந்த அணிகள் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தை இன்று இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 

இந்நிலையில், இரு அணிகளும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதைதொடர்ந்து, சற்று நேரத்தில் பன்னீர்செல்வம் ராயபேட்டையில் உள்ள தலைமை அலுவலகம் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்காக அதிமுக தலைமை அலுவலகம் நோக்கி அமைச்சர்களும் நிர்வாகிகளும், தொண்டர்களும் படையெடுத்து வருகின்றனர். இதனாள் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.