நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தியதாகவும், அதற்கு அவர் பரிசீலிப்பதாக கூறியதாகவும் முன்னாள் முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் தகுதியை நீட் எனும் பொதுத்தேர்வு மூலம் மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது.

இதற்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் மாநிலங்களின் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு நீட் தேர்வை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடத்தி முடித்தது.

இதைதொடர்ந்து வெளியான மதிப்பெண் முடிவுகளில், தமிழக மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

இதைதொடர்ந்து தமிழக முதலமைச்சரும், அமைச்சர்களும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு வேண்டும் என பிரதமரை வலியுறுத்தி வருகின்றனர்.

இதனிடையே நேற்று டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமரை நேரில் சந்தித்து நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பது குறித்து பரிசீலிப்பதாக பிரதமர் கூறியுள்ளார் என தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் பன்னீர் செல்வம் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தியதாகவும், அதற்கு அவர் பரிசீலிப்பதாக கூறியதாகவும் தெரிவித்தார்.