கருத்து கூறுவோரை மிரட்டுவது ஜனநாயகத்துக்கு எதிரானது என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் ஊழல் இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக கமலுக்கும், அமைச்சர்களுக்கும் இடையேயான வார்த்தை மோதல்கள் அடுத்தடுத்து நடைபெற்று வருகிறது. ஊழல் குற்றச்சாட்டு குறித்து பொத்தாம் பொதுவாக கூறக் கூடாது என்று அமைச்சர்களும், ஊழல் குறித்த விவரங்களை அத்துறைக்கு அனுப்புமாறு நடிகர் கமலும் கூறியிருந்தனர்.

இதைதொடர்ந்து கமலஹாசனின் ஆதரவாளர்கள் அவருக்கு ஆதரவாக போஸ்டர்களை ஒட்டி அமர்களப்படுத்தி வருகின்றனர்.

ஆனால் இவர்களை நானே பார்த்து கொள்கிறேன், போஸ்டர்களை ஒட்டி உங்கள் நேரத்தையும் பணத்தையும் வீணடிக்காதீர்கள் என கமல் ட்விட் செய்துள்ளார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் கருத்து கூறுவோரை மிரட்டுவது ஜனநாயகத்துக்கு எதிரானது எனவும் அரசை பற்றி கருத்து கூற நடிகர் கமலுக்கு அனைத்து உரிமையும் உள்ளது எனவும் தெரிவித்தார்.

மேலும் கமலை மிரட்டுவது, அவரை அடிபணிய வைப்பது அரசுக்கு நல்லதல்ல எனவும், ஒபிஎஸ் தெரிவித்தார்.