அரைகுறை ஆடைகளுடன் ஆபாசமாக நடித்து கலாச்சாரத்தை கெடுத்த கமல் அரசியலுக்கு வரும்போது ரஜினி அரசியலுக்கு வருவதில் எந்த தவறும் இல்லை என பாஜக தேசிய முன்னாள் செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார். 

காரைக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த  எச்.ராஜா;- டெல்லி போராட்டத்தில் விவசாயிகள் ஒருவர் கூட இல்லை. தற்போது, டெல்லியில் போராடுபவர்கள் பாதாம்பருப்பு, பிஸ்தாபருப்பு, வாஷிங்மெஷின், மசாஜ், வாட்டர் ஹீட்டர் கொடுக்கிறேன் எனக்கூறி அழைத்து வந்தவர்களாகவே இருப்பார்கள்.  காவிரி டெல்டா விவசாயிகளின் உரிமைகளுக்காக போடப்பட்ட வழக்கை வாபஸ் வாங்கியவர் கருணாநிதி. ஆனால், டெல்டா விவசாயிகளின் உரிமைகளை திரும்ப பெற்று தந்தவர் ரங்கநாதன். வேளாண் சட்டத்தை ரங்கநாதனர் ஆதரிக்கிறார். சாராய முதலாளி டி.ஆர்.பாலு எதிர்க்கிறார். உண்மையான விவசாய சங்கங்கள் அரசுடன் பேச தயாராக உள்ளது. 

மேலும், பாஜக கட்டுப்பாட்டில் ரஜினி இல்லை. கமல் எம்ஜிஆரின் விசுவாசியாக இருந்தால் எம்ஜிஆர் ஆட்சி கொண்டு வருவேன் எனக் கூறலாம். ஆனால், அவர் எம்ஜிஆர் விசுவாசியாக செயல்படவில்லை. அதனால் எம்ஜிஆர் ஆட்சி கொண்டு வருவேன் என்று கூறுவதற்கு கமலுக்கு உரிமை இல்லை. 

ரஜினி ரசிகர்கள் ஏராளமானோர் திமுகவில் உறுப்பினர்களாக உள்ளனர். ரஜினி கட்சி ஆரம்பித்தால், அவரது கட்சிக்கு திமுகவிலிருந்து ஏராளமானோர் சென்றுவிடுவர். இது திமுகவுக்கு பலவீனம். சினிமாவில் அரை குறை ஆடையுடன் ஆபாசமாக நடித்து கலாச்சாரத்தை கெடுத்த கமல் அரசியலுக்கு வரும்போது, ரஜினி வருவதில் எந்தத் தவறும் இல்லை என எச்.ராஜா காட்டமாக கூறியுள்ளார்.