விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்.பி.யும், ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான ஆர். லட்சுமணன் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். 

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமணன் மாநிலங்களவை உறுப்பினராக அதிமுக சார்பில்  தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், ஜெயலலிதா இருந்த போது கட்சியிலிருந்து சி.வி.சண்முகம் ஓரம் கட்டப்பட்டபோது விழுப்புரம் மாவட்ட செயலாளராக டாக்டர் லட்சுமணன் நியமிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து, ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக இரண்டாக பிரிந்த போது ஓபிஎஸ் அணியில் அவர் இருந்து வந்தார். 

,தனையடுத்து, ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்ததால் சசிகலாவால் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். பின்னர், ஓபிஎஸ் இபிஎஸ் அணிகள் இணைந்த பின் லட்சுமணனுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. குறிப்பாக அமைச்சர் சி.வி.சண்முகத்தை எதிர்த்து அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் ஏழாம் பொறுத்தம். ஆகையால், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் லட்சுமணன் சீட் கேட்டார். ஆனால் சட்டத்துறை அமைச்சர் சிவி. சண்முகம் தனது அரசியல் எதிர்காலத்தைக் கருதி, லட்சுமணனுக்கு சீட் கொடுக்க விடாமல் செய்துவிட்டார்.

அதன்பிறகு மாவட்ட அளவில் ஓரங்கப்பட்ட லட்சுமணன், கடலூரைப் போல விழுப்புரம் மாவட்டத்தையும் பிரித்து தன்னை மாவட்டச் செயலாளராக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதுவும் தோல்வியில் முடிந்தது.  இதனால், கடும்  லட்சுமணன் கடும் அதிருப்தியில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், அதிமுக முன்னாள் எம்.பி.லட்சுமணன் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். இந்த இணைப்பு விழாவில் முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாராதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.