அதிமுக முன்னாள் எம்.பி.யும் முன்னாள் மாவட்ட செயலாளருமான, ஓபிஎஸ் ஆதரவாளருமான டாக்டர் லட்சுமணன் விரைவில் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமணன் மாநிலங்களவை உறுப்பினராக அதிமுக சார்பில்  தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், ஜெயலலிதா இருந்த போது கட்சியிலிருந்து சி.வி.சண்முகம் ஓரம் கட்டப்பட்டபோது விழுப்புரம் மாவட்ட செயலாளராக டாக்டர் லட்சுமணன் நியமிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து, ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக இரண்டாக பிரிந்த போது ஓபிஎஸ் அணியில் அவர் இருந்து வந்தார். 

இதனையடுத்து, ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்ததால் சசிகலாவால் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். பின்னர், ஓபிஎஸ் இபிஎஸ் அணிகள் இணைந்த பின் லட்சுமணனுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. குறிப்பாக அமைச்சர் சி.வி.சண்முகத்தை எதிர்த்து அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் ஏழாம் பொறுத்தம். ஆகையால், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் லட்சுமணன் சீட் கேட்டார். ஆனால் சட்டத்துறை அமைச்சர் சிவி. சண்முகம் தனது அரசியல் எதிர்காலத்தைக் கருதி, லட்சுமணனுக்கு சீட் கொடுக்க விடாமல் தடுத்து முத்தமிழ் செல்வனுக்கு சீட் வாங்கிக் கொடுத்து வெற்றி பெறவைத்தார். 

சமீபத்தில் அதிமுகவில் நடைபெற்ற மாவட்டப் பிரிப்பில் அதைப் பிரித்து தனக்கு ஒரு மாவட்ட செயலாளர் பதவிக்கு முயற்சித்தார். அதுவும் தோல்வியில் முடிந்தது. இதனால், கடும்  லட்சுமணன் கடும் அதிருப்தியில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், தொடர்ந்து அதிருப்தியில் இருந்து வந்த லட்சுமணன் தனது ஆதரவாளர்களடன் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை அறிந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி லட்சமணனிடம் சமாதான முயற்சியில் ஈடுபட்டு வந்ததாகவும் அந்த முயற்சி தோல்வி அடைந்ததாகவும் கூறப்படுகிது. சமீபத்தில் முன்னாள் சுகாதாரத்துறை  அமைச்சர் வி.எஸ்.விஜய் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.