விளாத்திக்குளம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ மார்க்கண்டேயன் இன்று காலை மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவில் சீட் மறுக்கப்பட்டதால் சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதனால் அதிமுகவில் இருந்து மார்க்கண்டேயன் நீக்கப்பட்டு எந்த கட்சியிலும் சேராமல் இருந்து வந்தார்.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று விளாத்திகுளம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ மார்க்கண்டேயன் திமுகவில் இணைந்தார். அப்போது, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை பொதுசெயலாளர் பொன்முடி, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி., திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன், மாவட்ட செயலாளர் கீதா ஜூவன் எம்எல்ஏ ஆகியோர் உடனிருந்தனர்.

இதனையடுத்து, கட்சியில் இணைந்த மார்க்கண்டேயன் அளித்த பேட்டியில்;- விவசாய முதல்வர் என சொல்லி விவசாயிகளின் வயிற்றில்  அடிக்கும் எடப்பாடி அரசுக்கு மரண அடி கொடுக்கவும் மு.க.ஸ்டாலின் தமிழகத்தை ஆளவும் அவருக்கு மகுடம் சூடுவதற்கும் மக்கள் காத்திருக்கின்றனர். வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெறும் என கூறினார்.