வெளிப்படைத் தன்மையுடன்  ஒரு அரசு செயல்பட வேண்டும் என்றால் அங்கு ஊடகங்களுக்கு முழு சுதந்திரம் இருக்க வேண்டும் என மூத்த வழக்கறிஞரும்,  மத்திய அரசின் முன்னாள் கூடுதல் தலைமை வழக்கறிஞருமான மாசிலாமணி தெரிவித்தார். சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் ரவீந்தரன் அவர்களின் ஏற்பாட்டின் பேரில் ஊடக சுகந்திரம் என்ற தலைப்பில் வீடியோ கான்பிரன்சில் மூலம் கருந்தரங்கு நடைபெற்றது, அதில் மூத்த வழக்கறிஞர் மாசிலாமணி பேசியதாவது :-ஊடகம் என்பது  இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்பதை அனைவரும் அறிவோம், ஒரு நாடு சுதந்திரமாகவும், ஜனநாயகபூர்வமாகவும் செயல்பட வேண்டும் என்றால் அங்கு ஊடகங்கள் வலிமையானதாகவும், சுதந்திரமாக செயல்படகூடியதாகவும் இருக்க வேண்டும். ஊடகங்களுக்கு உள்ள அதிகாரங்கள் என்னென்ன என்பது குறித்து இந்திய அரசியல் அமைப்பு சட்டம் வரையரை செய்துள்ளது.  மொத்தத்தில் ஒரு அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும் என்றால் அங்கு ஊடகங்களுக்கு முழு சுதந்திரம் இருக்க வேண்டும். குறிப்பாக கொரோனா உள்ளிட்ட இதுபோன்ற நெருக்கடிகாலங்களில் ஊடகங்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டியது மிகமிக அவசியம்,  அப்படி இருந்தால் மட்டுமே எவ்வளவு மக்களுக்கு நோய் தாக்கம் உள்ளது, அதை தடுக்க அரசு என்ன நடவடிக்கைகளை எடுக்கிறது, இன்னும் என்னென்ன செய்ய வேண்டும் என்பது போன்ற உண்மைத் தகவல்கள் மக்களுக்கு கிடைக்கும், அதன் மூலம் விழிப்புணர்வை பெறமுடியும். 

அதுமட்டுமின்ற அரசின் செயல்பாடுகள் திட்டங்கள் மக்களுக்கு தெரியவரும் என்றார். குறித்த நெருக்கடி காலங்களில் ஊடகங்களின் செய்திகளில் அரசு ஒருபோதும் தலையிடக்கூடாது, ஒரு ஜனநாயக நாடு முழு ஜனநாயகத்துவமாக இருக்க வேண்டுமெனில்,  அங்கு ஊடகங்கள் முழு சுதந்திரமாக செயல்பட வேண்டும். அப்படி இல்லையென்றால் அது முழு ஜனநாயக நாடாக இருக்க முடியாது. ஊடகங்கள் கொடுக்கும் செய்திகள் ஒருபோதும் தணிக்கை செய்யப்படக் கூடாது,  செய்திகள் தணிக்கைப்படுத்தப்பாடதவைகளாக இருக்க வேண்டும், ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தன்னுடைய கருத்தை சுதந்திரமாக வெளிப்படுத்தவும், உண்மை தகவல்களை பெறுவதற்கும்  முழு உரிமை உள்ளது. அதேபோல  உண்மை தகவல்களை தரவேண்டிய முழு பொறுப்பு ஊடகங்களுக்கு இருக்கிறது. ஊடகங்கள் நிறுவனங்கள் அல்ல, அவைகள் மக்கள் பிரதிநிதிகளாக இருந்து வருகின்றன.  இந்தியா ஒரு சுதந்திர நாடாக இருக்கின்ற காரணத்தினால் இந்தியாவில் 1 லட்சத்து 54 ஆயிரத்து 43 பத்திரிக்கைகள் பதிவு பெற்றுள்ளன.  நமது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் 70, 80 ஆண்டுகளுக்கு முன்பாகவே கை பிரதிகளை எழுதி வெளியிட்டவர்,  ஒரு செய்தித்தாள் என்பது தகவல்களின் அடிப்படையிலும், அறிவுக் களஞ்சியமாகவும் இருக்கவேண்டும் என்பதையே இது காட்டுகிறது. மொத்தத்தில்  செய்திகளை மக்களுக்கு தரவேண்டும் என்ற எண்ணமே ஊடகத்திற்கு போதுமானதாக உள்ளது என்றார். 

சுதந்திரத்திற்குப் பின்னர் இந்தியா இந்த அளவுக்கு அறிவார்ந்த சமூகமாக வளர்ந்து நிற்ப்பதற்கு பத்திரிக்கைகள் மிகப் பெரிய பங்காற்றியுள்ளன. பத்திரிக்கைகள் செய்த புரட்சிக்கு நாம் தலை வணங்க வேண்டும், அதேபோல ஒருதலைப்பட்சமான செய்திகள், உறுதிப்படுத்தப்படாத பொய்ச் செய்திகள், மிகைப்படுத்தப்பட்ட செய்திகள், சமூகத்தில் பதற்றத்தை உண்டாக்கும் செய்திகள் போன்றவைகளும் தினம் தினம் மக்களை ஆக்கிரமிக்கின்றன. சில ஊடகங்கள் மற்றவர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கான ஆயுதமாகவும் பயன்படுத்தப்படுகின்றன என்பதையும் நாம் மறுக்க முடியாது. பலர் இதுபோன்ற ஊடகங்களை கண்டு அஞ்சும் நிலைமை உள்ளது, ஆனால் அதுபோன்ற ஊடகங்களுக்கு எதிராக  சட்டப்பூர்வமாக போராடுவதற்கான வழிவகைகள் உள்ளன. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் தவறான தகவல்களையும் சில ஊடகங்கள் திணிக்க அனுமதிக்க கூடாது. அதை சட்டப்பூர்வமாக நாம் எதிர்த்து போராட வேண்டும். ஒரு ஊடகம் தவறான செய்தி வெளியிடும் பட்சத்தில் அந்த ஊடகத்தின் செய்தி வெளியீட்டை தடை செய்ய முடியும். செய்திகளை வேகமாக தருகிறோம் என்ற பெயரில் ஊடகங்கள் செயல்படுவது ஒருவகையில் வரவேற்கத்தக்கதுதான், ஆனால் 90% செய்திகள் ஏற்றுக்கொள்ளும் வகையில் இருந்தாலும் 10% செய்திகள் ஏற்றுக்கொள்ள முடியாதவைகளாக உள்ளன.  அது ஒரு களம் பாலில் ஒரு துளி விஷம் கலப்பதற்கு சமம்.  

10 சதவீத பொய் செய்திகள் ஒரு சமூகத்தையே சீரழிக்கும், திசைதிருப்பும் என்றார். வளர்ந்து வரும் டிஜிட்டல் யுகத்தில் ஊடகங்களில் வளர்ச்சி அபரிதமாக உள்ளது.  நமக்கு ஒரு செய்தி தேவையா இல்லையா என்பது தெரியாது, ஆனால் செய்திகள் வந்த வண்ணமே உள்ளன. பல நேரங்களில் செய்திகள் முன்னுக்குப்பின் முரணானவைகளாக இருப்பது கவலையளிக்கிறது.  நீதிமன்ற செய்திகளை ஊடகங்கள் அணுகும் போது மிக கவனமாக இருக்க வேண்டும்,  நீதிமன்றத்தில் வழக்கறிஞரின் வாதம் மற்றும் நீதிபதி கொடுக்கும் தீர்ப்புகளில் மிக கவனமாக இருக்க வேண்டும். ஆனால் பலநேரங்களில் நடப்பது ஒன்றும் செய்தியில் வரும் ஒன்றுமாக இருக்கிறது, தகவல்கள் முற்றிலும் மாறுபட்டவைகாக இருப்பதை காணமுடிகிறது என்றார்.  ஒரு செய்தியை தருவதற்கு முன் அதை தங்களிடமுள்ள தரவுகளின் அடிப்படையில் உறுதி செய்து வெளியிட வேண்டிய பெறுப்பு ஊடகங்களுக்கும், அதன் செய்தியாளர்களுக்கும் உள்ளது என்றார்.