தமிழகத்தில் வெளிநாட்டு மதுபானங்களின் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. நேற்று நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இருந்தன. இந்நிலையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி கடந்த 2016 ஆம் ஆண்டில் 500 கடைகள் மூடப்பட்டன. இதைத் தொடர்ந்து உச்சநீதிமன்ற உத்தரவுப்படியும் கடைகள் மூடப்பட்டதால் தற்போது 4 ஆயிரத்து 126 மதுபானக் கடைகள் மட்டுமே உள்ளன.

இந்த டாஸ்மாக் மதுக் கடைகளில் பிராந்தி, விஸ்கி, ஜின், ரம், பீர் ஆகிய மது வகைகளை  விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மதுவின் விலையை அரசு அவ்வப்போது  உயர்த்தினாலும் குடிமகன்கள் புலம்பிக் கொண்டே வாங்கி குடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.. டாஸ்மாக் மதுபானங்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பு இல்லாததால், அதற்கான ஆயத்தீர்வையை வருமானமாக மாநில அரசு பெற்று வருகிறது.தற்போது, இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு வகை மதுபானங்களில், சாதாரண மதுவுக்கான ஆயத்தீர்வை 56 முதல் 58 சதவீதமாகவும், நடுத்தர மதுவின் ஆயத்தீர்வை 58 முதல் 59 சதவீதமாகவும், உயர்தர மதுவின் ஆயத்தீர்வை 59 முதல் 62 சதவீதமாகவும் உள்ளது.

எலைட் என்ற மதுபானக் கடைகளில் வெளி நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றின் விலை ரூ.1,990-ல் இருந்து ரூ.21,130 வரை உள்ளது.

தற்போது தமிழக அரசின் நிதி பற்றாக்குறையை குறைக்கவும், வருவாயை அதிகரிக்கவும், வெளிநாட்டு இறக்குமதி மதுக்களுக்கான ஆயத்தீர்வையை அதிகரிப்பது  என நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி பற்றி இந்தக் 12 சதவீதம் ஆயத்தீர்வையை உயர்த்தப் பட உள்ளது.

இன்று சட்டசபையில் வணிகவரிகள் துறைக்கான மானியக் கோரிக்கை அலுவல்கள் எடுக்கப்பட உள்ளன. எனவே இதற்கான அறிவிப்பு  இன்று வெளியாகலாம் அல்லது சட்ட மசோதா தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குவாலிட்டியாக குடிக்கும் குடிமகன்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.