காலியாக உள்ள ஓசூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு அமைச்சர் பதவியைப் பிடிக்க அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தீவிரம் காட்டிவருகிறார்.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது செயல்பட்ட ஐவர் அணியில் கே.பி.முனுசாமி பவர்புல்லாக இருந்தார். ஆனால், 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு கட்சி பொறுப்பிலிருந்தும் அமைச்சர் பதவியிலிருந்தும் முனுசாமியை ஜெயலலிதா நீக்கினார். கடந்த 2016 சட்டப்பேரவைத்  தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டும் தோல்வியடைந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சி பிளவுபட்டபோது ஓபிஎஸ் அணிக்கு மாறினார்.

 

ஓபிஎஸ்-இபிஎஸ் இணைப்புக்கு பிறகு அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார். தற்போது அதிமுக தொகுதி பங்கீட்டுக் குழு தலைவராகவும் அவரே உள்ளார். சட்டப்பேரவை உறுப்பினராக இல்லாததால் தன்னால் அமைச்சராக முடியவில்லையே என்ற மனக்குறை அவருக்கு நீண்ட நாளாக இருந்து வந்ததாக அவரது ஆதரவாளர்கள் கூறிவந்தார்கள். தற்போது அந்த மனக்குறையைப் போக்க ஓசூர் தொகுதி மூலம் வாய்ப்பு கிடைத்திருப்பதால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள அவர் காய் நகர்த்திவருவதாக கிருஷ்ணகிரி அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

ஓசூர் இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருக்கும் முனுசாமி, அந்தத் தொகுதிக்கான சீட்டை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடமே கேட்டிருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அதிமுக தலைமையோ கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுமாறு அவரை கேட்டுக்கொண்டதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட தனக்கு உடன்பாடில்லை என்பதை கட்சித் தலைமையிடம் தெரிவித்துவிட்ட முனுசாமி, ஓசூர் தொகுதிதான் தனக்கு வேண்டும் என்று பிடிவாதம் காட்டிவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓசூர் தொகுதியில் வெற்றி பெற்றால், இரண்டு ஆண்டு காலத்துக்கு அமைச்சராகிவிடலாம் என்ற கணக்கில் கே.பி.முனுசாமி அந்தத் தொகுதி மீது ஆர்வம் காட்டிவருகிறார் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

இதற்கிடையே ஓசூர் தொகுதி எம்.எல்.ஏ. பதவியிழந்த பாலகிருஷ்ணா, இடைத்தேர்தலில் போட்டியிட தனது மனைவிக்கு வாய்ப்பு கேட்டுவருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சர் தங்கமணி மூலமாக அதற்கான வேலைகளை அவர் செய்துவருவதாகவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கிறார்கள். கிருஷ்ணகிரி நாடாமன்றத் தேர்தலில் யாருக்கு சீட்டு என்பதைத் தாண்டி ஓசூர் தொகுதி யாருக்கு என்பதில் ஏற்பட்டுள்ள போட்டி, அதிமுக வட்டாரத்தில் பரபரப்பான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.