பாமக தலைவர் ராமதாஸுக்கு தோழர் மணியரசன் ஏன் அஞ்சி நடுங்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொது செயலாளர் வன்னியரசு கேள்வி எழுப்பி உள்ளார். 

இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர், ‘’பயங்கரவாதத்தில் நம்பிக்கை கொண்ட அல்கொய்தா அமைப்பையும் 
மக்களின் விடுதலைக்காக போராடி வரும் விடுதலைப்புலிகள் அமைப்பையும் ஒன்றாக தீவிரவாத அமைப்பாக அறிவித்து தடைவிதித்தது அமெரிக்கா. இலங்கை தீவில் சிங்கள பெரும்பான்மை அரசு, சிறுபான்மை மக்களான தமிழர்களை அழிக்க இனவாத அரசியலை முன்வைத்து அரச பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டது. சிறுபான்மை தமிழர்களை காப்பாற்ற மேதகு பிரபாகரன் தலைமையில் விடுதலைப்புலிகள் அமைப்பு உருவானது. 

தமிழ்த்தேசிய அரசியலை முன்வைத்து தமிழின விடுதலைக்காக கால் நூற்றாண்டுக்கும் மேலாக விடுதலைப்புலிகள் போராடி வருகிறார்கள். 
சிங்கள பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராக,  சுரண்டலுக்கு எதிராக, சிங்கள ஆதிக்கத்துக்கு எதிராக போராடிய விடுதலைப்புலிகள் அமைப்பும்
 எந்த கொள்கையுமற்று பயங்கரவாத நடவடிக்கைகளில் மட்டும் நம்பிக்கை கொண்ட அல்கொய்தா அமைப்பும்  அமெரிக்காவின்  பார்வையில்
ஒன்றுதான். இரு அமைப்புகளையும்  தீவிரவாத அமைப்புகளாக பிரகடனப்படுத்தியது.


அமெரிக்காவின் ஆதிக்க அரசியலின் வெளிப்பாடுதான் இது. இதே வெளிப்பாட்டைத்தான்  தோழர் பெ.மணியரசன் அவர்கள் வெளிப்படுத்துகிறார். 
அரியலூர் மாவட்டம், பொன்பரப்பியில் தலித் குடியிறுப்புகளுக்குள் புகுந்து  ராமதாசின் வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்தியது. இது குறித்து அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் கண்டித்து அறிக்கை விட்டனர். அத்தனை தலைவர்களும் பாமகவின் வன்முறையை கண்டித்தனர்.  ராமதாசின் வன்முறை அரசியலை துணிச்சலாக அம்பலப்படுத்தினர். ஆனால், தமிழ்த்தேசிய பேரியக்கத்தின் தலைவராக அறிவித்துக்கொண்டு செயல்படும் தோழர் பெ.மணியரசன் பொன்பரப்பி தாக்குதல் குறித்து பேசிய வீடியோ ஒன்றை கவனிக்க நேர்ந்தது. 


அதில் வன்முறை செய்த பாமகவையும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக பாடாற்றும் விடுதலைச்சிறுத்தைகளையும் சாதியக்கட்சிகள் என்று தள்ளிவிடுகிறார். சாதிபெருமை பேசி சாதிவெறியை வளர்க்கும் பாமகவையும், சாதி ஒழிப்பை முன்னிறுத்தி தமிழ்த்தேசிய அரசியலை 
வளர்க்கும் விடுதலைச்சிறுத்தைகளையும் ஒன்றாக சேர்ப்பதின் மூலம் தோழர் மணியரசன் அவர்களது சிந்தனை என்னவாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. 


விடுதலைச்சிறுத்தைகள் தமிழ்த்தேசிய இயக்கமல்ல என்று  ஒருமுறை சான்றிதழ் அளித்தார். (எப்போது தாசில்தார் ஆனார் என்று தெரியவில்லை) தலித்துகள் தமிழரில்லை என்ற பொதுப்புத்தியிலிருந்தி தான் தோழர் மணியரசன் இப்படி சொல்லியிருக்க முடியும் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த பின்னணியிலிருந்து தான் பொன்பரப்பி வன்முறையை பார்க்கிறார்  என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. 

வன்முறை நடந்த இடத்துக்கு தோழர் மணியரசன் ஒரு குழுவாக சென்று விசாரித்து அறிக்கையாக கொடுக்காமல், ராமதாசு அறிக்கையில் என்ன சொன்னாரோ அதையே  இவரும் மறுபிரதி எடுத்து கொடுத்துள்ளார்.  இரு கட்சிகளுமே வன்முறையில் ஈடுபட்டதாகவும் நாட்டாமைத் தனமாக 
தீர்ப்பெழுதி உள்ளார். சேரிக்குள் புகுந்து “பறப்பயலுகளுக்கு பானை ஒரு கேடா”  என்று சாதி வெறியோடு தாக்குதல் நடத்திய பாமகவை வெளிபடையாக கண்டிக்க தோழர் மணியரசனுக்கு எந்த துணிச்சலும் இல்லை.  ராமதாசை நினைத்து அஞ்சி நடுங்குகிறார். 

ராமதாசின் அரசியல் தமிழின ஓர்மைக்கு எதிரானது என்றும் அவரது சாதிய வன்முறை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானது என்றும் வெளிப்படையாக கண்டிக்க என்ன அச்சம்? விடுதலைச்சிறுத்தைகள் எங்கே வன்முறை செய்தது என்று சான்று காட்ட முடியுமா? மரங்களை வெட்டி சாலையை மறித்திருக்கிறோமா? குடிசைகளை கொளுத்தி உழைக்கும் மக்களை நடுத்தெருவில் நிறுத்தி இருக்கிறோமா? அப்பாவி இளைஞர்களை அடித்து கொன்று தண்டவாளத்தில் வீசியிருக்கிறோமா? இப்படி எதுவும் செய்யாத விடுதலைச்சிறுத்தைகள் மணியரசன் பார்வையில் வன்முறை இயக்கம். சாதி இயக்கம். என்ன ஒரு அறிவியல் பார்வை. 

இந்துத்துவ  ஆர்எஸ்எஸ் பின்னணியில் செயல்படும் பாமகவும் புரட்சியாளர் அம்பேத்கரின் தத்துவப் பின்னணியில் செயல்படும் விடுதலைச்சிறுத்தைகளும் ஒன்றா? பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நின்று பேசுவது தான்  நீதி. ஆனால் பாதிக்கப்பட்டவர்களும் வன்முறையாளர் என்று முத்திரை குத்த முயல்வது  வன்முறையாளர்களை மறைமுகமாக ஆதரிப்பதாகவே பொருள். அந்த வேலையை தான்  தோழர் மணியரசன் அவர்கள் செய்து வருகிறார். இதில் வேறு தமிழ்த்தேசிய பேரியக்கம் என்று ஏமாற்றி வருகிறார். சாதி ஒழிப்புக்காக இதுவரை என்ன செய்திருக்கிறார்? சாதி ஒழிப்புக்காக களமாடிவரும் பெரியாரையும், புரட்சியாளர் அம்பேத்கரையும் இவர் இதுவரை ஏற்றுக் கொண்டதில்லை. 
கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இருந்த போது அங்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக செயல்பட்டார் என்பதால் தான் அந்த இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இப்போது தமிழ்த்தேசியப் பேரியக்கம் என்ற பெயரில் ஒடுக்கப்பட்டு வரும் தமிழர்களுக்கு எதிராக அமைப்பை நடத்தி வருகிறார். குழப்பங்களை ஏற்படுத்தி தமிழர்களுக்குள் ஒற்றுமை ஏற்பட்டுவிடக்கூடாது என்ற இந்துத்துவக் கொள்கையை நடைமுறைப்படுத்தி வரும் ராமதாசின் அரசியலை தனிமைப்படுத்தாத எந்த அரசியலும் மக்களுக்கு  பயனில்லை. அந்த பயனில்லாத அரசியலைத்தான் தோழர் மணியரசன் செய்து வருகிறார்’’ எனப்பதிவிட்டுள்ளார்.