டி.டி.வி.தினகரன் ஆதரவாளராக செயல்பட்டு வந்த கருணாஸ் எம்.எல்.ஏ திடீரென தனது ஆதரவு அதிமுகவுக்குத் தான் எனக் கூறி அரசியலில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.

திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான கருணாஸ் இன்று சட்டப்பேரவையில் இது குறித்து பேசுகையில், ’’ஜெயலலிதா ஆசியால் தான் நான் எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டேன். அந்த நன்றியை நான் என்றும் மறக்க மாட்டேன். ஆகையால் இந்த 5 ஆண்டுகளுக்கும் அதிமுவுக்கு தான் எனது ஆதரவு’’ என அவர் தெரிவித்தார். 

கூவாத்தூரில் வெளியேறியது முதல் வள்ளுவர் கோட்டம் ஆர்ப்பாட்டம் வரை அதிமுகவுக்கு எதிராக ஆர்ப்பரித்து வந்த கருணாஸ் தீடீர் திருப்பமாக வாலண்ட்ரியாக வண்டியேறி தானாக சரண்டராகி இருக்கிறார் கருணாஸ். டி.டி.வி.தினகரன் ஆதரவாளராக அறியப்பட்ட கருணாஸ் கடந்த செப்டம்பர் 16-ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் அதிமுக அரசையும் வன்மையாக பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இதற்காக அவர் மீது கைது நடவடிக்கைகளும் பாய்ந்தன. இதனால், வெறுப்பான கருணாஸ் அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தார். இதனைத் தொடர்ந்து அவரது எம்.எல்.ஏ பதவியை நீக்கவும் சபாநாயகர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அத்துடன் தொடர்ந்து அதிமுகவுக்கு எதிராக கருத்துக்களை பதிவு செய்து வந்தார் கருணாஸ். அடுத்த  திருப்பமாக சபாநாயகருக்கு எதிரான நோட்டீஸை திரும்பப் பெற்றார். இதனை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 2ம் தேதி எடப்பாடியை சந்தித்து திடீர் திருப்பத்தை ஏற்படுத்தினார்.

அப்போது ‘’எனது தொகுதி கண்டு கொள்ளப்படாமல் இருக்கிறது. எனது சந்திப்பு என் சமூக ரீதியான கோரிக்கைகளை முன் வைக்கவே. காழ்ப்புணர்ச்சி பார்க்காமல் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியே முதல்வரை சந்தித்தேன். அரசியல் சாசனப்படி அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தில்தான் போட்டியிட்டு வென்றேன். ஆகையால் முதல்வரை ஒரு எம்.எல்.ஏ என்கிற முறையில் சந்தித்து கோரிக்கைகளை வைத்தேன்.

டி.டி.வி.தினகரன் எனது உறவினர். அவருக்காக நான் கவர்னர் வரை சந்தித்து வந்திருக்கிறேன்’’ என நழுவினார். டி.டி.வி.தினகரன் ஆதரவாளராக காட்டிக் கொண்ட கருணாஸ், திமுக நடத்திய மாதிரி சட்டமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டு ஸ்டாலினுக்கு புகழாரம் சூட்டினார். இந்நிலையில் இப்போது அதிமுகவுக்குத் தான் தனது ஆதரவு என அந்தர்பல்டி அடித்திருக்கிறார்.