இலங்கையில் உணவு பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்து வருவது போல் இந்தியாவிலும் உணவு பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
உணவு பொருட்கள் விலை கடும் உயர்வு
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மக்கள் உண்ண உணவின்றி தவித்து வருகின்றனர். ஒரு கப் டீ யின் விலை 100 ருபாயை கடந்துள்ளது. அரிசி ஒரு கிலோவின் விலை 500 ரூபாயை தொட்டுள்ளது. முட்டை 38 ரூபாய்க்கும், கேஸ் சிலண்டர் விலை 5000 ரூபாயாவும் விற்கப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் பல பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல், டீசல் இல்லாமல் மூடப்பட்டுள்ளது. எரிவாயு பற்றாக்குறை காரணமாக 10 மணி நேர மின் வெட்டு ஏற்பட்டுள்ளது. இலங்கை சுதந்திரம் அடைந்த பிறகு சந்தித்துள்ள மிகப்பெரிய அளவிலான பொருளாதார நெருக்கடி என கூறப்படுகிறது. இதன் காரணமாக மக்கள் வாழ்வதற்கே அச்சமடைந்துள்ளனர். இதனால் போர் காலத்தில் அகதிகளாக தமிழகம் வந்தது போல் தற்போது மீண்டும் வர துவங்கியுள்ளனர்.

விரைவில் இந்தியாவிலும் இதே நிலை?
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நிலை தொடர்பாக கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இலங்கையில் ஏற்பட்டுள்ள் பொருளாதார சரிவு, அடுத்த இரண்டு ஆண்டில் இந்தியாவில் ஏற்படும் என கூறினார். இலங்கையில் தற்போது இரண்டு ஆப்பிள் 450 ரூபாய்க்கு விற்கப்பட்டு வரும் நிலை விரைவில் இந்தியாவிலும் வரும் என தெரிவித்தார். ஏனென்றால் இந்தியாவின் பொருளாதார கொள்கை அப்படி உள்ளதாக தெரிவித்தார். எனவே தற்போதே எச்சரித்து விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இல்லையென்றால் , இலங்கை மக்களை போல் நாமும் வரிசையில் நிற்க வேண்டும் என தெரிவித்தார்.
