தமிழ்நாட்டில் கொரோனாவால் நேற்று மாலை நிலவரப்படி 7204 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மார்ச் 24ம் தேதியிலிருந்து ஊரடங்கு அமலில் இருக்கிறது. மே 17ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. 

ஊரடங்கால் மக்கள் வருவாயை இழந்து தவித்துவரும் நிலையில், ஏழை, எளிய மக்களுக்கு ரேஷன் கடைகளில் கொடுக்கப்படும் உணவுப்பொருட்கள் தான், அவர்களது உணவு தேவையை பூர்த்தி செய்துவருகிறது. அரசும் ரேஷன் கடைகளின் மூலம் இலவச அரிசி, பருப்பு, சர்க்கரை மட்டுமல்லாமல் குறைவான விலைக்கு மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பையும் வழங்கிவருகிறது. அதுமட்டுமல்லாமல் ஊரடங்கு அமல்படுத்தியதுமே, ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்பட்டது. 

இவ்வாறு ஏழை, எளிய, நடுத்தர மக்களின் நம்பிக்கையாக இருக்கும் ரேஷன் கடைகள் தான், அவர்களின் பசியை போக்கிவருகிறது. இந்நிலையில், ஒருநபர் மற்றும் 2 நபர்கள் ரேஷன் கார்டுகளுக்கு வழங்கப்பட்டுவந்த அரிசியின் அளவு குறைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. 

அதாவது, ஒருநபர் கார்டுக்கு வழங்கப்பட்டுவந்த 12 கிலோ அரிசி, 7 கிலோவாகவும், 2 நபர் கார்டுக்கு வழங்கப்பட்டுவந்த 20 கிலோ அரிசி, 16 கிலோவாகவும் குறைக்கப்பட்டிருப்பதாக ஒரு தகவல் வெளியாகி வைரலானது. இந்நிலையில், இதுகுறித்து உணவுத்துறை அமைச்சர் காமராஜ் விளக்கமளித்துள்ளார்.

மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் காமராஜ், ஒருநபர் மற்றும் 2 நபர் ரேஷன் கார்டுகளுக்கான அரிசி அளவில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. எப்போதும் போலவே ஒருநபர் கார்டுக்கு 12 கிலோ அரிசியும், 2 நபர் கார்டுக்கு 20 கிலோ அரிசியும் வழங்கப்படும் என தெரிவித்தார்.