கேரளாவிற்கு வெள்ள நிவாரண நிதியாக 25 லட்சம் ரூபாய் கமல் அறிவித்த நிலையில் அவர் இரட்டை வேடம் போடுவதாக ரசிகர்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். கேரள மாநிலம் கடும் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் இருந்து கேரளாவிற்கு வெள்ள நிவாரண நிதி குவிந்து வருகிறது. தமிழகத்தில் நடிகர்கள் கார்த்தி, சூர்யா இணைந்து முதன் முதலாக கேரளாவிற்கு வெள்ள நிவாரண நிதி அறிவித்தனர். இதனை தொடர்ந்து நடிகர் கமல் தனது பங்காக கேரளாவிற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரண நிதி அறிவித்தார். மேலும் ரசிகர்களும் கேரளாவிற்கு நிவாரண நிதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

கமலின் இந்த செயல் தான் தற்போது சர்ச்சையாகியுள்ளது. ஏனென்றால் கடந்த 2015ம் ஆண்டு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் வெள்ளத்தில் சிக்கி கடுமையாக பாதிக்கப்பட்டது. அப்போதும் நடிகர்கள் பலர் நிவாரண நிதி அளித்தனர். அந்த சமயத்தில் நடிகர் கமலிடம் வெள்ள நிவாரண நிதி பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த கமல், ஏன் நான் வருமான வரி செலுத்தவில்லையா? மக்கள் செலுத்தும் வருமான வரி எல்லாம் என்ன ஆனது? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

அதாவது வருமான வரி செலுத்தியிருக்கும் போது நான் எதற்கு வெள்ள நிவாரண நிதி கொடுக்க வேண்டும் என்கிற ரீதியில் கமல் அப்போது பேசியிருந்தார். இந்த நிலையில் கேரளாவில் வெள்ளம் என்றதும் யாரும் கேட்காமலேயே கமல் 25 லட்சம் ரூபாயை அள்ளிக் கொடுத்துள்ளார்.

கேரளாவிற்கு வெள்ள நிவாரண நிதியை கமல் கொடுத்தை ஏற்றுக் கொள்ளலாம், ஆனால் தமிழகத்திற்கு தரமாட்டேன் என்று கூறிய கமல் தற்பேது கேரளாவுக்கு மட்டும் ஓடோடி சென்று உதவுவது ஏன் என்று ரசிகர்கள் வினவுகின்றனர். மேலும் அரசியலுக்கு வந்துவிட்டதால் மக்களின் அபிமானத்தை பெற கமல் வெள்ள நிவாரண நிதியை கொடுத்துள்ளாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.