Asianet News TamilAsianet News Tamil

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட மக்களுக்கு நிவாரணம் அறிவிப்பு.. யார் யாருக்கு எவ்வளவு? இதோ முழு விவரம்.!

நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், வீடுகளுக்கு வெள்ளம் புகுந்து பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

flood affected people of South district.. CM Stalin Relief announcement tvk
Author
First Published Dec 22, 2023, 6:29 AM IST

வரலாறு காணாத வகையில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட மக்களுக்கு யார் யாருக்கு எவ்வளவு நிவாரணம் என்ற அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். 

நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், வீடுகளுக்கு வெள்ளம் புகுந்து பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில்,  தூத்துக்குடி மற்றும் நெல்லைக்கு சென்று ஆய்வு பணி மேற்கொண்டு நிவாரண உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இதனைடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் ஸ்டாலின்;- 

* மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, நெல்லை மக்களுக்கு ரூ.6,000, தென்காசி மற்றும் குமரி மக்களுக்கு ரூ.1000 நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார். 

* மழை, வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, இழப்பீட்டுத் தொகையை ரூபாய் 4 இலட்சத்திலிருந்து, 5 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். 

* சேதமடைந்த குடிசைகளுக்காக ஏற்கனவே வழங்கப்படும் தொகை ரூபாய் 5 ஆயிரத்தினை. ரூபாய் 10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். 

* மழையினால் 33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாகப் பாதிக்கப்பட்ட நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 13 ஆயிரத்து 500 ரூபாயிலிருந்து, 17 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். 

* பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் 33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாகச் சேதமுற்றிருப்பின், இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 18 ஆயிரம் ரூபாயிலிருந்து, 22 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். 

* மழையினால் 33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாகப் பாதிக்கப்பட்ட மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 7,410 ரூபாயிலிருந்து, 8,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். 

* 33,000 ரூபாயாக இருந்த எருது, பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்பு நிவாரணத்தை. 37,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். 

* 3,000 ரூபாயாக இருந்த வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணத்தை 4,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். 

* சேதமடைந்த படகுகள் மற்றும் வலைகளுக்கு நிவாரண உதவிகளைப் பொறுத்தவரையில், முழுமையாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு (மீன்பிடி வலைகள் உட்பட), 32,000 ரூபாயிலிருந்து, 50 ஆயிரம் ரூபாயாகவும், பகுதியாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு 10 ஆயிரம் ரூபாயிலிருந்து, 15 ஆயிரம் ரூபாயாகவும். முழுவதும் சேதமடைந்த வல்லம் வகை படகுகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மானியத் தொகை ரூபாய் 75 ஆயிரத்திலிருந்து, ஒரு இலட்சம் ரூபாயாகவும். முழுவதும் சேதமடைந்த இயந்திரப் படகுகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மானியத் தொகை ரூபாய் 5 இலட்சத்திலிருந்து. ரூபாய் 7 லட்சத்து 50 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கிடவும். சேதமடைந்த வலைகளுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூபாய் 10 ஆயிரத்திலிருந்து, ரூபாய் 15 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். 

* அதி கனமழையின் காரணமாக, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மிகக் கடுமையாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள வட்டங்களில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக 6 ஆயிரம் ரூபாயாக வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios