Fisherwomen shoot dead in threspuram tuticorin

தூத்துக்குடி வன்முறையின் போது, கலெக்டர் இல்லம் அருகே உள்ள திரேஸ்புரத்துக்குள் நுழைந்த போலீசார், கலவரம் குறித்து எதுவும் அறியாமல் தனது சகோதரியைப் பார்க்க வீட்டை விட்டு வெளியே வந்த ஜான்சி என்ற மீனவப் பெண்ணை கண் இமைக்கும் நேரத்தில் சுட்டுத் தள்ளினர். இதில் ஜான்சியின் மண்டை ஓடு உடைந்ததோடு கண்களும், மூளையும் சிதறியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் நடந்த பேரணியில் ஏற்பட்ட வன்முறையில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடச் சென்ற போராளிகள் மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இது பெரும் கலவரமாக உருவெடுத்தது.

இதையடுத்து போலீசார் கண்ணில் பட்டவர்களை எல்லாம் தாக்கினர். துப்பாக்கியால் சுட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட வெனிஸ்டா என்ற 10 ஆம் வகுப்பு மாணவியை வாயில் குறி வைத்து போலீசார் சுட்டனர். இந்த சம்பவம் அனைவரையும் வேதனை அடையச் செய்தது.

இந்நிலையில் எந்தப் போராட்டத்திலும் கலந்து கொள்ளாத ஜான்சி என்ற பெண்ணை துப்பாக்கியால் சுட்டு அவரது பிணத்தை நாயைப் போன்று வேனில் தூக்கிச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.

மாவட்ட ஆட்சியரின் இல்லம் அமைந்துள்ள இடத்தில் இருந்து வெறும் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் மீனவ கிராமப் பகுதிதான் திரேஸ்புரம். கலெக்டர் அலுவலகப் பகுதியில் ஏற்பட்ட கலவரம் முடிவுக்கு வந்த பின்னர் திரேஸ்புரத்திற்குள் நுழைந்த காவல் துறையினர், அங்கிருந்த மீனவ மக்களை மிகக் கடுமையாக தாக்கினர்.

அப்போது, கலவரம் குறித்து எதுவும் அறியாத ஜான்சி என்ற பெண் தனது வீட்டில் இருந்து சகோதரி வீட்டுக்கு செல்வதற்காக வெளியே வந்தார். கண் இமைக்கும் நேரத்தில் அவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இந்த தாக்குதலில் ஜான்சியின் மண்டை ஓடு உடைந்து அப்பகுதியில் சிதறியுள்ளது. அதே போன்று ஜான்சியின் மூளையும், கண்களும் அப்பகுதியில் சிதறியது.

ஜான்சியை சுட்டவுடன் அவரது உடலை நான்கு போலீசார் வேகமாக வேனில் தூக்கிப் போட்டு கொண்டு சென்றதையும் அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். ஜான்சி கீழே பிணமா விழுந்து கிடக்கு. போலீஸ் வண்டியில வந்த நாலு பேரு, நாயை தூக்கறமாதிரி இழுத்து வண்டியில போட்டுட்டு போய்ட்டாங்க என அந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் அச்சத்துடன் தெரிவித்தார்.

காலை முதல் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் சிலர் வீடு திரும்பிய நேரத்தில் போலீஸ் வாகனம் திரேஸ்புரம் வந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், ஜான்சி தவிர மேலும் ஒரு இளைஞரையும் துப்பாகியால் சுட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இது குறித்து தகவல் அறிந்த ஜான்சியின் கணவர் ஜேசுபாலன் அரசு மருத்துவமனைக்கு சென்றபோது தனது மனைவி ஜான்சி பிணமாக கிடந்ததையும், அவரோடு தலையில் ஒரு பகுதியும், ஒரு கண்ணும் இல்லை என்பதையும் அறிந்து கதறித் துடித்தார். மனைவியின் அலங்கோல நிலையைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போனார்.

ஜான்சி போரட்டத்தில் பங்கேற்கவில்லை ஆனாலும் அவர் துப்பாக்கிக் குண்டுக்கு இரையாகிவிட்டார் என்பதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை என்கின்றனர் திரேஸ்புரம் மக்கள்.

ஜான்சி தலை சிதறிப்போனத பாத்தா, ரொம்பவும் பக்கத்தில் நின்னுதான் போலீஸ் துப்பாக்கியால் சுட்டிருக்க வேண்டும் என கூறப்படுகிறது. இதே போல் திரேஸ்புரத்துக்குள் நுழைந்த காவல் துறையினர் பல இளைஞர்களையும் இழுத்துச் சென்றதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஒரு சராசரி மீனவப் பெண்ணாக தனது வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்த ஜான்சி தற்போது பிணமாக அரசு மருத்துவமனையில். அவரது மண்டை ஓடும், மூளையும் சிதறிக் கிடந்ததை இன்னும் மறக்க முடியாமல் உறைந்து கிடக்கின்றனர் திரேஸ்புரம் மக்கள்.