fishermen protest minister jayakumar in delhi
மீன்பிடி படகுகளில் சீன எஞ்சின்கள் பயன்படுத்துவதையும் அதற்கு உடந்தையாக இருக்கும் அமைச்சர் ஜெயக்குமாரையும் கண்டித்து சென்னை காசிமேடு பகுதியில் மீனவர்கள் போராட்டம் நடத்துவதால் அப்பகுதியே களேபரமாக காட்சியளிக்கிறது.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட அமைச்சர் ஜெயக்குமார், இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணைக்காக டெல்லி சென்றுள்ளார்.
மீன்பிடி படகுகளில் சீன எஞ்சின்களைப் பயன்படுத்துவதைக் கண்டித்து சென்னை காசிமேடு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர்கள், மீன்பிடி படகுகளில் சீன எஞ்சின்களைப் பயன்படுத்தி அதிகமான மீன்களைப் பிடித்து விடுவதால் விசைப்படகு மீனவர்கள் மீன் கிடைக்காமல் வருமானத்திற்கு வழியின்றி தவிப்பதாக கதறுகின்றனர்.
இதுதொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், ஆத்திரமடைந்த மீனவர்கள், சென்னை காசிமேடு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் போலீசார் நடத்திய சமரச பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து மீனவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். ஆண், பெண் பாரபட்சமின்றி போலீசார் தடியடி நடத்தினர். அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் அடித்து உடைக்கப்பட்டன.
வாழ்வாதாரத்தையும் வருமானத்தையும் இழந்து, வேறுவழியின்றி வீதியில் இறங்கி மீனவர்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில், மீனவர்களின் இந்த நிலைக்கு காரணம் என குற்றம்சாட்டப்படும் அந்த துறை சார்ந்த அமைச்சர் ஜெயக்குமார் டெல்லியில் இருக்கிறார்.
சென்னை காசிமேடு பகுதியே களேபரமாக கிடக்கிறது. ஏற்கனவே சீன எஞ்சின் பயன்படுத்துவது தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்த அமைச்சர் ஜெயக்குமார், தற்போது இவை எதையும் பொருட்படுத்தாமல், கட்சியின் சின்னத்தை மீட்க டெல்லியில் தஞ்சமடைந்துள்ளார்.
மீனவர்களின் நலனைக் காக்க வேண்டிய மீன்வளத்துறை அமைச்சராலேயே அவர்களின் வாழ்வாதாரமும் வருமானமும் பறிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல், இங்கே அசாதாரண சூழல் நிலவும் நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் சின்னத்திற்காக டெல்லியில் இருப்பது மீனவர்களிடையேயும் மக்கள் மத்தியிலும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
