ஒகி புயலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கல்விக்கான நிதியை ஒதுக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி 143  மீனவ  தொழிலாளர்களின் குடும்பங்களில் தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை படிக்கும் 387 குழந்தைகளுக்கான கல்விச் செலவை மாநில அரசு ஏற்றுக்கொள்ளும் என முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்,

கேரள கடற்கரை பகுதிகளில் கடந்த  ஆண்டு நவம்பர் மாதம் 30-ந்தேதி தாக்கிய ‘ஒகி’ புயல் பெரும் சேதங்களை விளைவித்தது. அங்கிருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நூற்றுக்கணக்கான மீனவர்கள் புயலில் சிக்கி மாயமாகினர். இவர்களுக்கு தேவையான உதவிகளை செய்த கேரள அரசு, புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் நிதி உதவி அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஒகி புயலால் பாதிக்கப்பட்ட  மீனவ தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான கல்விக்கான நிதியை ஒதுக்கி முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி 143 மீனவ  தொழிலாளர்களின் குடும்பங்களில் தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை படிக்கும் 387 குழந்தைகளுக்கான கல்விச் செலவை மாநில அரசு ஏற்றுக்கொள்ளும் என்றும் . புத்தகம், துணிகள் மற்றும் கல்விச் செலவுகள் உட்பட முழுமையான கல்விக்கான ஒரு திட்டத்தை அரசு அமல்படுத்தும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

ஒக்கி புயலில் தந்தை அல்லது பாதுகாவலர் இறந்ததோடு படிப்பைத் தொடர முடியாமல் சிரமத்துக்குள்ளான குழந்தைகளுக்கு கைகொடுத்து உதவுவது இந்த திட்டத்தின் நோக்கமாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த சிறப்பு திட்டத்தின் கீழ் இந்த கல்விக்கான உதவி வழங்கப்படும். உயர்கல்வியில் எந்த படிப்பை தேர்வு செய்தாலும் அதற்கான கட்டணம் உட்பட அரசு பொறுப்பேற்கும். வெளிமாநிலங்களில் படிப்போருக்கான கல்விச் செலவு குறித்தும் அரசு பரிசீலனை செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு, அரசு உதவிபெறும், அரசு உதவி பெறாத கல்விநிறுவனங்கள் என்கிற வித்தியாசம் பார்க்காமல் இந்த உதவி வழங்கப்படும். மீனவ தொழிலாளர் குடும்பங்களுக்காக உணவு தயாரிப்பு மையம் அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் பினராயி பிஜயன் அறிவித்தார்.