நாவலருக்கு நூலகத்துடன் கூடிய மணிமண்டபம் அமைக்க வேண்டும் என மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி கோரிக்கை வைத்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-  திராவிட இயக்க முன்னோடி தலைவர்களில் ஒருவரும், நீண்ட காலம் தமிழக அமைச்சராக பணியாற்றியவருமான ஐயா. நாவலர் நெடுஞ்செழியன் அவர்களின் நூற்றாண்டு விழாவில் அவரை தமிழக மக்கள் போற்றுவது மகிழ்ச்சியளிக்கிறது. அவர் எனது நாகப்பட்டினம் தொகுதியில் உள்ள திருக்கண்ணபுரத்தில் 11.07.1920 ஆம் ஆண்டு பிறந்தவர். அவர் தன் இளமையில்  தந்தை பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். 

 

திருப்பூரில் நடைபெற்ற திராவிடர் கழக கூட்டத்தில் அவர் ஆற்றிய உரை தந்தை  பெரியாரை கவர்ந்தது. அதுவே பொது வாழ்வில் அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது.தமிழ் மீது கொண்ட பற்றால் பெற்றோர் சூட்டிய நாராயணசாமி என்ற தன் பெயரை நெடுஞ்செழியன் என மாற்றிக்கொண்டார். தனது சிறப்பான சொற்பொழிவுகளால் நாவலர் என அனைவராலும்  கொண்டாடப்பட்டார். "தம்பி வா... தலைமையேற்க வா..." என அண்ணாவால் நம்பிக்கை பொங்க அழைக்கப்பட்டவர் என்பது அவரது கூடுதல் சிறப்பாகும். பேரறிஞர் அண்ணா, டாக்டர் MGR, டாக்டர் கலைஞர், டாக்டர் அம்மா என நான்கு முன்னாள் முதல்வர்களோடு நெருக்கமான பயணித்த சிறப்புக்குரியவர் என்பதும், பெருந்தலைவர் காமராஜர், கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் போன்ற ஆளுமைகளாளும் மதிக்கப்பட்டவர் என்பதும் அவரது வரலாற்றை அலங்கரிக்கிறது.

அவரது சிறப்பை போற்றும் வகையில்,அவரது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவர் பிறந்த திருக்கண்ணபுரத்தில் நூலகத்துடன் கூடிய மணிமண்டபத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும் என சட்டமன்றத்தில் வலியுறுத்தினேன். மாண்புமிகு தமிழக முதல்வரிடமும் நேரில் கடிதம் அளித்தேன்.இன்று அவரது நூற்றாண்டு விழா கொண்டாடப்படும்  தருணத்தில், அதே கோரிக்கையை தமிழக அரசிடம் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இதை விரைந்து செயல்படுத்துவார் என்று எதிர்பார்க்கிறேன்.
என அதில் கூறப்பட்டுள்ளது.