யூபிஎஸ்சி தேர்வு மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து முதல் பெண் ஐ.பி.எஸ். தேர்வாகியுள்ளார். நீட் தேர்வு அச்சத்தில் தற்கொலை செய்து கொள்வது தவறான முடிவு. உழைத்தால் வெற்றி கிடைக்கும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை அடுத்த ஆற்றூர் மங்களநடையை சேர்ந்தவர் பிரேமசந்திரன். இவர் காவல்துறையில் ஓய்வுபெறற உதவி ஆய்வாளர்.இவரது மனைவி ரெஜினாள் ஓய்வு பெற்ற ஆசிரியை. இவர்களது இரண்டாவது மகள் பிரவீணா(27) ஆசிரியர்களின் உந்துதலால் 5ம் வகுப்பு படிக்கும்போதே ஐ.ஏ.எஸ. ஆகவேண்டும் என்ற லட்சியத்தில் இருந்தார்.

பள்ளிப் பருவத்திலேயே அதிக புத்தங்கள், பத்திரிகைகளைப் படித்து வந்தார். மதுரை தியாகராஜா கல்லூரியில் பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த பின்னர் கோவையில் உள்ள ஐஏஎஸ் அகாடமியில் யூபிஎஸ்சி. தேர்வுக்கு பயிற்சி பெற்று அங்கேயே மாணவர்களுக்கு பாடம் நடத்தி வந்தார். 5 முறை யூபிஎஸ்சி.க்கு முயற்சி செய்து 3 முறை தோல்வி அடைந்தார்.

2018-ல் ஐ.ஆர்.டி.எஸ். தேர்வாகி லக்னோவில் பயிற்சி பெற்ற நிலையில் கடைசியாக நடந்த யூபிஎஸ்சி தேர்வில் 445-வது இடத்தை பெற்றார். இதில் அவர் காவல் துறையின் ஐபிஎஸ்.சை தேர்வு செய்துள்ளார். இதன் மூலம் பிரவீணா கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து தேர்வான முதல் பெண் ஐபிஎஸ். அதிகாரி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

இதுகுறித்து பிரவீணா கூறுகையில்; 5 வருட கடின உழைப்பிற்குக் கிடைத்த பலன் இது. 3 முறை தோல்வி அடைந்தபோது, நாள் ஒன்றிற்கு 10 மணி நேரம் படிப்பு, 2 மணி நேரம் பயிற்சி என எடுத்த நிலையிலும் வெற்றி கிடைக்கவில்லையே என வருத்தம் ஏற்பட்டது.அப்பா காவல்துறையில் பணியாறறியதால் அவர் மூலம் தன்னம்பிக்கையும், உத்வேகமும் கிடைத்தது. இதனால் மேலும் கடின உழைப்புடன் பயிற்சி எடுத்தேன். பலன் கிடைத்தது. நீட் உட்பட பல தேர்வுகள் கடினமாக இருக்கும் என நினைத்து தேர்வு எழுதச் செல்லும் முன்பே மாணவ, மாணவியர் தற்கொலை செய்து கொள்வது வேதனைக்குரியது.

பல தோல்விகள் அடைந்தாலும் அடுத்த முறை வெற்றி பெறுவேன் என்ற தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டால் வெற்றி பெறலாம். தேர்வு மட்டும் வாழ்க்கை கிடையாது. எனவே நீட் தேர்வெழுதும் மாணவர்கள் தற்கொலை எண்ணத்தைக் கைவிடவேண்டும் என்றார்.