Asianet News TamilAsianet News Tamil

முதலில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்யுங்கள்; பிறகு எங்களிடம் வாருங்கள் - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அட்டாக்...

First DMK MLAs resign Then come to us - Minister Rajendra Balaji attack...
First DMK MLAs resign Then come to us - Minister Rajendra Balaji attack...
Author
First Published Mar 31, 2018, 8:24 AM IST


விருதுநகர்

காவிரி மேலாண்மை வாரியம் விஷயத்தில் முதலில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்யட்டும்.  அதன் முடிவை பார்ப்போம். பின்னர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவை பற்றி பேசுவோம் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.

அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், "காவிரி மேலாண்மை வாரிய பிரச்சனை தொடர்பாக அ.தி.மு.க. உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்திருப்பது கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்று டி.டி.வி.தினகரன் விமர்சித்திருப்பது ஏற்புடையதல்ல. 

மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்ற காலக்கெடு முடிந்தபிறகுதான் போராட்ட நடவடிக்கைகளை அறிவிக்க முடியும். தி.மு.க. கூட அதன்பின்புதான் போராட்டத்தை அறிவித்துள்ளது. போராட்ட நடவடிக்கையில் அ.தி.மு.க. முந்திவிட்டது என்ற எண்ணத்தில் டி.டி.வி.தினகரன் விமர்சித்துள்ளார்.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். முதலில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்யட்டும்.  அதன் முடிவை பார்ப்போம். பின்னர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவை பற்றி பேசுவோம். 

மக்களை சந்தித்து வீதிவீதியாக சென்று அவர்களின் ஆதரவினை பெற்று அவர்களுக்கு சேவை செய்யவே பதவிக்கு வந்துள்ளோம். மக்களின் உரிமையை பெற்றுத்தர வேண்டியது நமது கடமை. அதைவிட்டுவிட்டு ராஜினாமா என்று சொல்வது நாகரிகமான செயல் அல்ல. ஓடி, ஒளியக் கூடாது. மக்களின் உரிமையை பெற்றுத்தர போராடி வெற்றி பெற வேண்டும்.

ஆளும் பொறுப்பில் இருக்கும் அ.தி.மு.க. எடுத்தேன், கவிழ்த்தேன் என செயல்பட முடியாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு சட்டரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் தேவையான அழுத்தம் கொடுக்க தமிழக அரசு தொடர் நடவடிக்கை எடுக்கும். 

உச்ச நீதிமன்றத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

தமிழக அரசு பதவி விலக வேண்டும் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். எந்த பதவியிலும் இல்லாத அவர் அப்படித்தான் சொல்வார். எப்படியாவது இந்த அரசை கவிழ்த்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இவ்வாறான கருத்துக்களை கூறி வருகிறார். இது அவரது அபயக்குரல். 

மக்களின் உரிமையை பெற்றுத் தருவதில் தமிழக அரசு எவ்விதத்திலும் பின் வாங்காது. தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை பிரச்சினை தொடர்பாக எழுச்சி ஏற்பட்டுள்ள நிலையில் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் மதுரை திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளது சரிதானா? என்று கேள்வி எழுப்புவது ஏற்புடையதல்ல. 

அது ஒன்றும் தொழிலதிபர் வீட்டு திருமண நிகழ்ச்சியல்ல. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாளையொட்டி ஏழை, எளிய வீட்டுப் பிள்ளைகளுக்கான திருமணம். அரசியல் ரீதியாக எதிர்ப்பவர்கள் இம்மாதிரியான தேவையற்ற கருத்துக்களை கூறுகின்றனர்.

அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் திரும்பி வர வேண்டும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அழைத்திருப்பது முறையானதுதான். அ.தி.மு.க. என்பது 46 ஆண்டு காலம் பழமை வாய்ந்த ஆலமரம் போன்றது. 

மக்களுக்காக பல போராட்டங்களை நடத்தி வெற்றிகளை குவித்த இயக்கம். இந்த இயக்கத்தில் யார் வேண்டுமானாலும் இளைப்பாறலாம். இந்த இயக்கம் தொடர்ந்து மக்களுக்காகவே போராடி வரும் இயக்கம். 

எனவே, இங்கிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வரவேண்டும் என்று அவர் அன்புடன் அழைத்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியத்திற்காக மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் அ.தி.மு.க. உண்ணாவிரத போராட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்கள், மக்கள் நலனில் அக்கறை உள்ளோர் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். அவர்களை யாரும் தடுக்கப் போவதில்லை" என்று அவர் கூறினார்.  

Follow Us:
Download App:
  • android
  • ios