முதலில் மு.க.ஸ்டாலினை சந்தித்துச் சென்ற தினேஷ் குண்டுராவ் கொரோனா உறுதியாகி சிகிச்சை எடுத்த நிலையில் கடந்த வாரம் மு.க.ஸ்டாலினை சந்தித்துச் சென்ற கே.எஸ்.அழகிரியும் கொரோனா உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட உடன் தினேஷ் குண்டு ராவ் சென்னை வந்து அ ந்த கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து தமிழகத்தில் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சியின் தலைவர் என்கிற அடிப்படையில் தினேஷ் குண்டுராவ் மு.க.ஸ்டாலினையும் சந்தித்து பேசினார். அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது சுமார் 20 நிமிடங்கள் வரை ஸ்டாலினுடன் தினேஷ் குண்டுராவ் இருந்தார்.

அப்போது தினேஷ் குண்டுராவ் மு.க.ஸ்டாலினுக்கும், மு.க.ஸ்டாலின் தினேஷ் குண்டுராவுக்கும் சால்வை அணிவித்து மரியாதை செய்து கொண்டனர். அத்துடன் மிக மிக அருகாமையிலும் இருவரும் அமர்ந்து இருந்தனர். இந்த நிலையில் சென்னையில் இருந்து பெங்களூரு திரும்பிய தினேஷ் குண்டுராவுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. பரிசோதித்த போது அவருக்கு கொரோனா உறுதியானது. இதனை அடுத்து இந்த தகவல் உடனடியாக திமுக தலைமைக்கும் தெரிவிக்கப்பட்டது. ஏனென்றால் தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா உறுதியாவதற்கு முன்னர் அவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துச் சென்று இருந்தார்.

இந்த தகவல் கிடைத்த உடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா, மகன், மகள், மருமகன் என அனைவருமே அதிர்ச்சிக்கு ஆளாகினர். ஏனென்றால் கொரோனா காலகட்டத்தில் மு.க.ஸ்டாலினை சுற்றி ஏகப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை அவர்கள் செய்து வைத்திருந்தனர். பெரும்பாலும் ஸ்டாலினின் பொது நிகழ்ச்சிகளை கூட தவிர்த்தனர். ஆனால் காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் என்பதால் தினேஷ் குண்டுராவை சந்திக்க ஒப்புக் கொண்டது ஸ்டாலின் தரப்பு. ஆனால் குண்டுராவுக்கு கொரோனா உறுதியானதால் அதிர்ச்சி அடைந்த துர்கா, உடனடியாக மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள கேட்டுக் கொண்டார்.

காலையில் கொரோனா பரிசோதனை எடுத்த நிலையில் மாலையில் ஸ்டாலினுக்கு நெகடிவ் என வந்த பிறகு தான் துர்கா உள்ளிட்டோருக்கு உயிரே வந்தது. இதனை அடுத்து மறுபடியும் ஸ்டாலின் வெளி நபர்களை சந்திக்க கட்டுப்பாடுகள் அதிகமாக்கப்பட்டன. இந்த நிலையில் கடந்த வாரம் மறுபடியும் தினேஷ் குண்டுராவ் சென்னை வந்து ஸ்டாலினை சந்திக்க நேரம் கேட்டிருந்தார். நீண்ட யோசனைக்கு பிறகே ஸ்டாலினை சந்திக்க திமுக தலைமை நேரம் ஒதுக்கியது. அதன்படி சென்னை வந்த தினேஷ் குண்டுராவ் தன்னுடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோரை அழைத்துக் கொண்டு அறிவாலயம் வந்திருந்தார்.

அங்கு ஏற்கனவே நடந்ததை போலவே சுமார் 20 நிமிடங்கள் வரை சந்திப்பு நடைபெற்றது. ஆனால்இந்த முறை சால்வை, பூசெண்டு போன்றவற்றிற்கு திமுக தலைமை முற்றிலும் தடை விதித்தது. இதனால் கை கூப்பி வணக்கம் தெரிவித்துவிட்டு பேச்சுவார்த்தையை குண்டுராவ் – ஸ்டாலின் தொடங்கினர். வழக்கம் போல் தொகுதிப்பங்கீடு குறித்து திமுக – காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றாலும் அதனை வெளியே வந்து வழக்கம்போல்மறுத்துவிட்டு இரண்டு கட்சி தலைவர்களும் வீடுகளுக்கு சென்றுவிட்டனர்.

ஆனால் கடந்த முறை குண்டுராவ் குண்டு போட்ட நிலையில் இந்த முறை கே.எஸ்.அழகிரி குண்டு போட்டுள்ளார். ஆம், ஸ்டாலினை சந்தித்துச் சென்ற நிலையில் கே.எஸ்.அழகிரிக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் அவர் தன்னை சந்தித்தவர்கள், தான் சந்தித்தவர்கள் என அனைவரையும் கொரோனா பரிசோதனை எடுத்துக் கொள்ள கேட்டுக் கொண்டுள்ளனார். இதனால் மறுபடியும் மு.க.ஸ்டாலின் வீட்டில் அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளன. ஏனென்றால் கே.எஸ்.அழகிரி ஸ்டாலினையும் சந்தித்துச் சென்று உள்ளார் அல்லவா?