மு.க.ஸ்டாலின் தரம் தாழ்ந்துதான் பேசுவார் என்றும், அவரால் தரமாக பேச முடியாது என்றும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி விமர்சித்துள்ளார்.

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக அணி சார்பில் போட்டியிடும் ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து, ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அகரம்சேரி என்ற பகுதியில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

 

அப்போது, 500க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில், அதிமுக தொண்டர்களின் பேரணி நடைபெற்றது. இதனை தொடக்கிவைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி முனுசாமி, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்தயது அதிமுக அரசுதான் எனத் தெரிவித்தார். 

இந்த திட்டத்திற்கு அடிக்கல் மட்டுமே நாட்டிவிட்டு, திமுக-தான் அதனை நிறைவேற்றியதாக மு.க. ஸ்டாலின் கூறுவது உண்மைக்கு மாறானது என கே.பி. முனுசாமி கூறினார். மேலும், தீயசக்தியின் மகன் என்பதால், மு.க.ஸ்டாலின் தரம் தாழ்ந்துதான் பேசுவார் என்றும், அவரால் தரமாக பேச முடியாது என்றும் கே.பி.முனுசாமி விமர்சித்தார்.